பண்டிகைகளும் உணவுகளும் நமது கலாசாரத்துடன் இணைந்தவை. ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஒருவகை சிறப்பு உணவு, அதன் மகத்துவத்தை மேலும் கூட்டுகிறது. அவ்வகையில் ஓணம் பண்டிகைக்கு அதன் சிறப்பு உணவான ஓணசத்யா பற்றி ஒரு சுவையான கட்டுரை…
கேரளத்தில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதன் வண்ணமயமான மற்றும் சுவையான பல்வேறு சடங்குகள் கேரள மாநிலத்தைத் தாண்டியும் உலகளவில் பல்வேறு மக்களை ஈர்த்துள்ளது. பல வண்ணப் பூக்கோலங்கள், அலங்கரிக்க பட்ட யானைகள் உள்ளிட்டவை இப்பண்டிகையின் சிறப்பு. இவை மட்டுமல்லாது மற்றொரு சிறப்பு, சத்யா எனப்படும் அறுசுவை விருந்து.
உணவு என்பது ஒரு கலாசாரத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மிகச் செழுமையான கலாசாரத்திற்கு பெயர்போன கேரள மாநிலத்தின் உணவு வகைகளின் சிறப்பைச் சொன்னால் புரியாது, சுவைத்தால் தான் உணர முடியும். அதில் சத்யா என்பது, சாதம், பல குழம்பு வகைகள், கூட்டு, இனிப்பு வகைகள் என அறுசுவையும் நிறைந்த விருந்து. ஒவ்வோர் உணவின் சிறப்பு பற்றி, செஃப் சரவணனிடம் கேட்டோம்… அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
வழக்கமான ஓணம் சத்யா விருந்தில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் உள்ளன. அவை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சாதம், துவரம்பருப்பு, பப்படம் (அப்பளம்), நெய், வாழைப்பழம் பல்வேறு வகையான ஊறுகாய், பச்சடி, கிச்சடி, அவியல், சாம்பார், தோரன் (வறுவல்) ஓலன், காளான், கூட்டு, கறி, ரசம், மோர், பாயசம் (இனிப்பு) ஆகியவை முதன்மையானவை. இந்த உணவு வகைகளின் ஆரோக்கிய நலன்கள் என்னவென்பதை பார்ப்போம்.