சென்னை: ஒற்றை தலைமைக்கே பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி மீது வழக்கு தொடர்ந்தால் அவரே வென்று காட்டுவார் என்று ஓபிஎஸ்சுக்கு, முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்து பேசினார்.
சந்திப்புக்கு பின்னர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டி:
அதிமுக தலைமை கழகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரும்பான்மையானவர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று பேசினர். இது குறித்து தான் கூட்டத்தில் பேசப்பட்டது, விவாதிக்கப்பட்டது, கருத்து தெரிவிக்கப்பட்டது. நடைபெறக்கூடிய பொதுக்குழுவில் அதற்கான முடிவு தெரியவரும். இது உட்கட்சி பிரச்னை. என்னுடைய ஆதரவு யாருக்கு, மற்றவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை கட்சி அலுவலகத்திலோ, பொதுக்குழுவிலோ தான் பேச வேண்டுமே தவிர, விவாதிக்கக்கூடிய இடம் இது அல்ல. யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது. யாருக்கு இல்லை என்பது உங்களுக்கே தெரியும். மிகப்பெரும்பான்மை ஒற்றை தலைமையை விரும்புகிறது. ஒற்றை தலைமையை மிகப்பெருன்பான்மையானவர்கள் விரும்புகின்ற போது, அதை எல்லாருமே ஏற்று கொள்வார்கள்.
எனவே, அதிமுக பிளவுபட வாய்ப்பில்லை. அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது ஓபிஎஸ் உடன் 11 எம்எல்ஏக்கள் போனார்கள். பின்னர் 11 உறுப்பினர்களுடன் ஒபிஎஸ் சேர்ந்தார். ஆட்சியில் அப்போது ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்தார். ஓபிஎஸ் எப்போதுமே சமாதானத்தை விரும்புபவர் தான். ஒற்றை தலைமையையும் ஏற்றுக்கொள்பவர் தான். ஒற்றை தலைமை வேண்டும் என்று தான் நாங்கள் சொல்கிறோம். பொதுகுழு அதற்கு முழு வடிவம் தரும். அது எப்படிப்பட்ட தலைமையாக இருக்கும் என்பதை பொதுக்குழு, செயற்குழு தான் முடிவு செய்யும். ஜெயக்குமாரை பொறுத்தவரை எப்போதுமே அதிமுகவினுடைய செய்திகளை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்பவர். அவர் ஒருவர் தான் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். அன்றைக்கும் அதே போல் தான் பகிர்ந்துள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக பாஜ எங்களுக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
எடப்பாடிக்கு என்ன ஆளுமை இருக்கிறது என்று கேட்கிறீர்கள். தமிழகத்தில் 4 ஆண்டு காலம் நெருக்கடியான ஒரு ஆட்சியை எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்தி எந்த பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல் செய்து காட்டினார் எடப்பாடி பழனிசாமி. கூட்டணியோடு இணைந்து 75 எம்எல்ஏக்களை வென்று காட்டியிருக்கிறார். அப்படியிருக்கும் போது எடப்பாடிக்கு என்ன ஆளுமை இருக்கிறது என்று நீங்கள் ஏன் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.