மருத்துவ உலகம் நாளுக்கு நாள் பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. இந்தச் சாதனைகளால் தான் கோவிட் போன்ற அதிக பரவும் தன்மையுள்ள வைரஸிடம் இருந்து நாம் போராடி மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட மருத்துவத்துறையில் அவ்வப்போது சில வியத்தகு விநோதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் சீனாவில் நடைபெற்றுள்ளது.

சீனாவின் ஷாங்காய் நகரில், ஒரு வயது ஆன குழந்தையின் தலை தொடர்ந்து வளர்ந்து வருவதைக் கவனித்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பல்வேறு சோதனைகளுக்குக் குழந்தை உட்படுத்தப்பட்டது. இறுதியாகச் செய்யப்பட்ட ஜீனோம் சோதனையில், குழந்தையின் மூளையில், பிறக்காத அதன் இரட்டையர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நியூராலஜி ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், `Fetus- in-Fetu’ என்ற மிகமிக அரிய நிகழ்வினால் இப்படி நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பெண் கர்ப்பமான மூன்று மாதங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பெண் முட்டையில் ஆண் விந்தணுவின் கருத்தரிப்பால் செல்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் செல்கள் சரியாகப் பிரியத்தவறும் போது இப்படி நடக்கிறது.

இதனால் தாயின் வயிற்றிலேயே ஒரு கரு மற்றுமொரு கருவால் சூழப்பட்டு இப்படி மூடப்படுகிறது. இதனால் உள்ளே இருக்கும் கருவால் வளர முடிவதில்லை. ஆனால் அதற்கும் ரத்தம் செல்வதால் அதுவும் உயிர்ப்புடன் இருக்கும். இப்படி ஒரு நிகழ்வுதான் சீனாவில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வை `ஒட்டுண்ணி இரட்டையர்’ என்ற வார்த்தை கொண்டும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. எகிப்து நாட்டில் சிறுவனின் வயிற்றுக்குள் 16 ஆண்டுகளாக இருந்த கரு 1997-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையின் வயிற்றில் இருந்து 8 கருக்கள் அகற்றப்பட்டுள்ளன. மிக மிக அரிய நிகழ்வுகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதே நேரம் இப்போது இருக்கும் அறிவியல் வளர்ச்சியின் மூலம் இந்தப் பிரச்னையில் உரிய சிகிச்சை அளிக்க முடியும் எனவும் கூறியுள்ளனர்.