ஒன்றிய அரசு உடைத்தால் மண் சட்டி மாநிலங்கள் உடைத்தால் பொன் சட்டி: பிரதமர் மோடிக்கு நிபுணர்கள் முன்வைக்கும் 10 கேள்விகள்

Share

‘இலவசம்’ என்ற ஒரு வார்த்தை, இன்று ஒட்டுமொத்த நாட்டையுமே பரபரப்பாக்கி உள்ளது. பிரதமர் மோடி முதல் மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள், உச்ச நீதிமன்றம், பொதுமக்கள் வரை அனைவரும் விவாதிக்கும் முக்கிய பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு விதை போட்டவர் பிரதமர் மோடிதான். ‘இலவசங்கள் என்பது அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி கலாசாரம். இலவசங்களால் நாடு குட்டிச் சுவராகிவிடும்’ என்று அவர் தெரிவித்தார். இலவசங்களை மாநில அரசுகளும், அவற்றை வழிநடத்தும் மாநில கட்சிகளும் மட்டுமே வழங்குவது இல்லை. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசும், மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் இலவசங்களை அளித்து வருகிறது. அதை மறந்து விட்டு மோடி இதை எப்படி பேசினார்? என்பதே அனைவரின் கேள்வி. ஒரு நாடு வல்லரசாக வேண்டும் என்றால்,

* அந்நாட்டு மக்களின் வறுமை ஒழிய வேண்டும்.  வாழ்க்கையும், பொருளாதாரமும் மேம்பட வேண்டும்.  அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை அடைய வேண்டும். மக்களின் நோயற்ற வாழ்க்கை உறுதிப்படுத்த வேண்டும். அனைவருக்கும் உயர்தர மருத்துவத்தை வழங்க வேண்டும். – இப்படியாக, அந்த பட்டியல் பெரிதாக நீண்டு கொண்டே போகும். ஆனால், இவற்றை எல்லாம் நாட்டின் அனைத்து மக்களும் தங்களின் சொந்த உழைப்பால் மட்டுமே அடைந்து விட முடியாது. ஏனெனில், நம் நாட்டை பொறுத்தவரை சாலையோர மக்கள் முதல் பல லட்சம் கோடி மதிப்பிலான பிரமாண்ட பங்களாவில் வாழும் தொழிலதிபர்கள் வரை உள்ளனர். இப்படிப்பட்ட பாரபட்சமான வாழ்க்கை நிலை இருக்கும்போது, ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுவதற்கு ஏணியாக அறிவிக்கப்படுவதுதான் ‘இலவச திட்டங்கள்’. ஆனால், இந்த இலவசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் திடீரென புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

*2013ம் ஆண்டு தீர்ப்பு என்ன?
திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வண்ண தொலைக்காட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, இது போன்ற இலவசங்களை விநியோகிக்க சட்டப்படி அனுமதி உண்டு. இது போன்ற இலவசங்களை வழங்குவதற்கான வாக்குறுதியை அல்லது விநியோகத்தை லஞ்சம் அல்லது ஊழலாக கருத முடியாது. இலவசங்களை விநியோகிப்பது மக்களின் வாழ்க்கையை நேரடியாக மேம்படுத்தும் என்பதால், அத்தகைய விநியோகம் என்பது மாநில அரசின் கொள்கை முடிவை சார்ந்தது. இதை அமல்படுத்தும்போது அதன் நிதி ஆதாரங்களை பரிசீலிக்க அரசுக்கு முழு சுதந்திரம் உள்ளது. இதில் நீதிமன்றம், தலையிட முடியாது இதுதான், அப்போதைய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய் அமர்வு அளித்த தீர்ப்பு. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது என்பதே, உச்ச நீதிமன்றத்தில் இப்போது தொடரப்பட்ட வழக்கின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. இது ஒரு இடியாப்ப சிக்கல் வழக்கு என்பதால், விரிவான பரிசீலனைக்காக 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

*பின்தங்கிய வடமாநிலங்கள்
ஒவ்வொரு மாநில அரசும், தங்கள் மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் அறிவித்த திட்டங்களால் நாட்டில் அனைத்து துறையிலும் முன்னோடி மாநிலமாக மாறி இருக்கிறதே தவிர, பின்னோக்கி செல்லவில்லை. அதே நேரம், பல வடமாநிலங்களின் மக்கள் கடுமையான வறுமையிலும், பஞ்சத்திலும் தவிக்கின்றனர். கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளதால், அந்த மாநிலங்களில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகி உள்ளனர். பொருளாதாரம், கல்வி, மருத்துவம் என அனைத்திலும் வடமாநிலங்கள்  பின்தங்கியே உள்ளன. அங்குள்ள பெரும்பாலானோர் பிழைப்பு தேடி தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலவசம் அளித்த பயன்கள்

 தமிழகத்தில் வழங்கப்பட்ட இலவச வண்ண தொலைகாட்சியால், பட்டி தொட்டிகளிலும் கூட மக்கள் தினமும் நடக்கும் நாட்டு நடப்புகள், பொது அறிவை மேம்படுத்தி பயன் அடைந்தனர். இலவச சைக்கிளால் மாணவர்களின் கல்வித் தரம் மேம்பட்டது. கூலி தொழில் செய்யும் அவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் துடைக்கப்பட்டது. இலவச லேப்டாப்கள் மூலம் கணினி அறிவை வளர்த்த மாணவர்கள், உயர்க்கல்வி, ஆராய்ச்சி படிப்புகளுக்கு செல்கின்றனர். இலவச மின்சாரத்தால், விவசாயிகள் நிம்மதியாக விவசாயம் செய்கின்றனர். ஒருபிடி சோற்றை நிம்மதியாக சாப்பிடுகின்றனர். இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் ஏழை, எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கிறது. இதில், பல லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு வழங்கும் இலவச சத்துணவு திட்டத்தால் அவர்களின் ஊட்டச்சத்து பாதுகாக்கப்பட்டு உள்ளன. தற்போது, இலவச காலை சிற்றுண்டியும் அளிக்கப்படுகிறது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்தால், பல இடங்களில் குடும்பங்களுக்கு மாதம் ஒரு பெரும் செலவு குறைக்கப்பட்டு உள்ளது. இலவச அரிசியால் பட்டினி கொடுமை ஒழிக்கப்பட்டுள்ளது.  இதுபோன்று இன்னும் பல்வேறு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் இலவச திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

*தொழிலதிபர்கள் தலைமறைவு
இந்த இலவச திட்டங்களை எதிர்க்கும் பிரதமர் மோடி, அவருடைய சொந்த மாநிலத்தை (குஜராத்) சேர்ந்தவர்கள், அவருக்கு மிகவும் நெருக்கமான தொழிலதிபர்கள் உட்பட 38 தொழிலதிபர்கள், வங்கிகளில் கடன் பெற்றும் மோசடி செய்து விட்டும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று பதுங்கி உள்ளனர். இவர்கள் செய்த மோசடி பணத்தின் அளவும், இவர்களுக்காக வராக்கடன்கள் என்ற பெயரில் மோடி ரத்து செய்த தொகையும் ரூ.10 லட்சம் கோடியை தாண்டி விட்டது. இந்த தொகையுடன் ஒப்பிட்டால், இலவச திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை மிக குறைவுதான். ‘இந்த வராக்கடன் தள்ளுபடியும், மோசடிகளும்தான் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து வருகிறதே தவிர,  ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த வழங்கும் இலவசங்களால் அல்ல,’ என்பதே, நடுநிலைவாதிகளின் ஆணித்தரமான கருத்து.

*மோடி மீது பாயும் கணைகள் இது தவிர, எண்ணற்ற கேள்விக் கணைகளும் அவர் மீது தொடுக்கப்படுகின்றன.
*இலவசங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் பிரதமர் மோடி, பாஜ ஆளும் மாநில அரசுகள் சார்பில் வழங்கப்படும் இலவசங்கள் குறித்து பேசாமல் மவுனம் காப்பது ஏன்?

* பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்த அவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது ஏன்?

* நாடு முழுவதும் பிரதான் மந்திரி திட்டங்களின் கீழ் இலவசங்களை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருவது ஏன்?

* இலவச வீடுகள், கழிப்பறைகளை கட்டி கொடுப்பதில் பெருமை கொள்ளும் பிரதமர் மோடி, அவற்றை இலவச கணக்கில் சேர்க்காதது ஏன்?

* கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச ஸ்கூட்டர்களுக்காக, தலா ரூ.25,000 மானியத்தை ஒன்றிய அரசு மானியம் கொடுத்தது ஏன்?

* சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணத்தை அம்மாநில முதல்வர் யோகி (பாஜவை சேர்ந்தவர்) அறிவித்தது எந்த கணக்கில் சேர்கிறது?

* இவ்வாறு பாஜ ஆளும் மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் இலவசங்களை, மானியங்களை வழங்கும்போது, நாடு குட்டிச்சுவராகும் என்று பிரதமர் மோடி யோசிக்கவில்லையா?

* மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரி வருவாய் மூலமே, பிரதமர் மோடி தனது பெயரில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துகிறார். இது, மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்ட இலவச வருவாய் அல்லவா?

* வழக்கமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், நீதிபதிகளுக்கு ஓய்வூதியத்தோடு, வீடு, வாகனம், பாதுகாப்பு, வேலையாட்கள் வழங்கப்படுகின்றனர். இது இலவசம் இல்லையா?

* இலவசங்களால் நாடு குட்டிச்சுவராகும் என்ற மோடியின் கருத்தில் உண்மை இருந்தால், உலகின் 5வது பலமிக்க பொருளாதார நாடு என்ற சாதனையை இந்தியாவால் நேற்று முன்தினம் எப்படி படைக்க முடிந்தது?

 இந்த கேள்விகளையும், மோடியின் இலவச எதிர்ப்பு கருத்துகளையும் எல்லாம் கூட்டிக் கழித்து பார்த்தால்,  ‘மாநில அரசுகள் உடைத்தால் பொன் சட்டி; ஒன்றிய அரசு உடைத்தால் மண் சட்டி’ என்ற கதைதான் நினைவுக்கு வருகிறது. இதை சொல்வது அரசியல் நிபுணர்கள்.

*திருப்பி செலுத்தாத கடன்
நாட்டில் முன்னணி தொழிலதிபர்களான பலர் வங்கிகளில் பல லட்சம் கோடி கடன் வாங்கி கொண்டு, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 38 தொழிலதிபர்கள் வெளிநாட்டில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அதன்படி, விஜய் மல்லையா, நிரவ் மோடி, நீஷால் மோடி, மெஹுல் சோக்ஸி, லலித் மோடி, நிதின் ஜே.சந்தேசரா, திப்தி சேத்தன்குமார் சந்தேசரா. ஹிதேஷ் நரேந்திர பாய் படேல், சஞ்சய் பண்டாரி, ஆஷிஷ் ஜோபன்புத்ரா மற்றும் ப்ரிதி ஜோபன்புத்ரா, ஹஜ்ரா இக்பால் மெமோம், ரிஷி அகர்வால், அரவிந்த் ஷாம், கபில் மற்றும் தீரஜ் வாஷவான், சஞ்சய் ஆனந்த் சந்தீப் ஜுன்ஜுவாலா, சஞ்சய் சுரேகா, அதுல் புன்ஜிதா உட்பட 38 பேர் பட்டியலில் உள்ளனர். இதில், குஜராத்தை சேர்ந்தவர்களே அதிகம். 2012ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் வேண்டுமென்றே கடன் செலுத்தாதவர்கள் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்து திருப்பி செலுத்தாத தொகை ரூ.2.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

*எல்லாவற்றையும் பிடுங்கும் ஒன்றிய அரசு
ஒன்றிய அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. இது, குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறது. மேலும், அவர்கள் தொழில் சார்ந்த பொருட்களை வாங்க மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை முறையாக செயல்பட விட்டாலே, அதிக லாபம் பெற்று மக்களுக்காக நிறைய திட்டங்களை செய்யலாம். ஆனால், பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு கொண்டு வந்து, அதை கூறு போட்டு விற்று நாட்டை குட்டிச் சுவராக்குகின்றனர். இதேபோல், ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களில் (உதய் போன்ற திட்டங்கள்) மாநில அரசை இணைத்து மானியம் தருவதாக அறிவிக்கிறார்கள். ஆனால், அதை தருவதில்லை. மாநில அரசின் வருவாயை (வரி) பிடுங்கி கொண்டு, ஒன்றிய அரசு மானியமும் தராததால் மாநில அரசுகள் கடனில் தத்தளிக்கின்றன. இதனால்,  நிலுவை தொகையும் அதிகரிக்கிறது. இதேபோல், மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட காஸ் மானியமும் வருவதில்லை. ரூ.600 காஸ் விற்ற நேரத்திலேயே கிட்டதிட்ட ரூ.200 மானியம் வந்தது. தற்போது ரூ.1000க்கும் மேல் காஸ் விலை விற்றும் வெறும் ரூ.24 மானியம் வழங்குகிறார்கள். இதுவும், பெரும்பாலானோருக்கு வருவதில்லை.

*மக்களிடம் வரியை வசூலித்து தொழிலதிபர்களுக்கு சலுகை மக்களிடம் பல்வேறு வகைகளில் வரி வசூல் செய்யும் ஒன்றிய அரசு, அதற்கான பலன்களை மக்களுக்கு தருகிறதா என்பது கேள்விக்குறிதான். சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பால், தயிர், அரிசி என தொடங்கி சுடுகாடு வரை வரி விதித்துள்ளனர். இதனால் ஏழை, எளிய மக்கள் பாதித்துள்ளனர். ஆனால், ஒரு சில தொழிலதிபர்களின் தொழில்களை மேம்படுத்த பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. கஷ்டப்பட்டு ஓடாய் தேய்ந்து வியர்வை சிந்தும் மக்களிடம் அதிக வரி வாங்கி கொண்டு அவர்களுக்கு எந்த சலுகையும் அளிக்காமல், அந்த வரி பணத்தின் மூலம் கோடீஸ்வரன் மேல் கோடீஸ்வரனாகும் தொழிலதிபர்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறது ஒன்றிய அரசு. இதனால், தற்போது குஜராத்தை சேர்ந்த அதானி உலகளவில் 3வது பணக்காரர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com