சென்னை: ஒண்டி வீரனின் 251-வது நினைவு தினத்தையொட்டி சிறப்பு தபால் தலை நேற்று வெளியீடு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பூலித்தேவனின் போர்ப்படைத் தளபதியாக, நெல்கட்டும்செவல் பகுதியில் மல்லுக்கட்டிய மாவீரன் ஒண்டி வீரன். ஒற்றையாய் ஆங்கிலேயரை சிதற அடித்த காரணத்தால் ஒண்டிவீரன் என்று புகழ் பெற்றவர். மன்னருக்கும் அவர் பின் வந்த மரபினருக்கும் வெற்றிகளை மட்டும் ஈட்டித் தந்த வீரத் திருமகனாக விளங்கிய அந்தப் பெருமகனுக்கு அஞ்சல்தலை வெளியிட்டு ஆராதனை செய்கிறது ஒன்றிய அரசு.
தமிழக பாஜவின் வேண்டுகோளை ஏற்று ஒன்றிய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் முருகன் முயற்சியில், நெல்லையில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. சிறப்பு தபால் தலையை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக் கொண்டார்.
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் பாளையங்கோட்டை மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரர்களை, கட்சி பேதம் பாராமல், இனம் , மொழி, மதம், பேதங்களைப் பாராமல், உள்ளன்போடு, உற்சாகமாகக் கொண்டாடி வரும், பாஜ சார்பில், நெல்லையின் காவல் தெய்வமாகத் திகழ்ந்த ஒண்டி வீரனை வணங்கி, போற்றி மகிழ்ச்சி அடைகிறோம்.