
உமேஷ் குமாரின் கண்களில் நீர்தேங்கியிருக்க, சென்னையிலிருந்து தம்பியைக் காணக் கிளம்புவதற்கான சிறப்பு ரயில் டிக்கெட்டை காண்பித்தார்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
-
இந்தியாவை உலுக்கிய ஒடிஷா ரயில் விபத்து குறித்த எந்தவித சலனமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று காணப்படவில்லை.
ரயில் நிலைய முகப்பில் உதவி எண் பலகை வைக்கப்பட்டிருந்த இடத்தில் நான்கு அலுவலர்கள் நான்கு தொலைபேசிகளுடன் அமர்ந்திருந்தனர். சென்னையில் இருந்து பிகார் மாநிலத்தில் உள்ள பத்ரக் மாவட்டத்திற்குச் செல்லும் சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு மட்டும் அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருந்தது.
பத்ரக் செல்லவிருக்கும் சிறப்பு ரயில் பற்றியும், அந்த ரயிலில் காயமடைந்த தங்களது உறவினர்களைச் சந்திக்க செல்லவிருக்கும் நபர்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள நாம் சில மணிநேரம் அங்கு செலவிட்டோம்.
உதவி எண்ணுக்கு மொத்தம் 26 அழைப்புகள்தான் வந்திருந்தன. அதிலும் பெரும்பாலான அழைப்புகள் ரயில் ரத்தான விவரங்கள் குறித்த அழைப்புகளாக இருந்ததாக அதிகாரிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
சிறப்பு ரயில் குறித்து விசாரித்தபோது, நான்காவது நடைமேடையில் அந்த ரயில் நின்றிருந்தது எனத் தெரிந்துகொண்டோம். சிறப்பு ரயில் என்பதற்கான எந்தவிதமான அறிவிப்புப் பாதககைகளும் தென்படவில்லை. அந்த ரயிலில் செல்லவிருக்கும் நபர்கள் குறித்துக் கேட்டபோது, உமேஷ் குமார் மற்றும் வினோத் சௌத்ரியை நமக்கு அதிகாரிகள் அடையாளம் காட்டினர்.
வேலைக்காக சென்னை வரும் நேரத்தில்…
சுமார் 50க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் அங்கு குவிந்ததால், அங்கிருந்தவர்கள் எப்படி பேசுவது என்று யோசித்துக்கொண்டிருந்தனர். உமேஷ் குமார், வினோத் சௌத்ரி ஆகியோர் மட்டும் தங்களுக்குத் தெரிந்த வகையில் தமிழில் பேச முன்வந்தனர்.
12 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு வந்தபோது, தனக்குப் பெரிய கனவு இருந்தது என்று பேசத் தொடங்கினார் 35 வயதான உமேஷ் குமார். வறுமையை வெல்வதற்கான பயணமாக அவர் பிகார் மாநிலம் கோபால்பூரிலிருந்து சென்னைக்கு வந்ததாகத் தெரிவித்தார்.
அவரைப் போலவே வருமானம் ஈட்ட சென்னைக்கு வரும் நேரத்தில்தான் அவரது தம்பி முகேஷ் குமார் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) ஒடிஷாவில் நடந்த பெரிய ரயில் விபத்தில் சிக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
மோசமான காயங்களுடன் தனது கால்களை அசைக்க முடியாமல் மருத்துவமனையில் முகேஷ் குமார் படுத்திருக்கிறார். அவரைச் சந்திக்க பதட்டத்துடன் சென்னையில் இருந்து பத்ரக் செல்லும் சிறப்பு ரயிலில் புறப்பட்டுள்ளார் உமேஷ் குமார்.
ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே நிகழ்ந்த கோரமான ரயில் விபத்தில், ஹவுரா – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் சென்னைக்கு வரும் பயணத்தை இந்த ரயில்களில் மேற்கொண்டிருந்தனர் என்று தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
“என் தம்பிக்காக வேலை பார்த்து வைத்திருந்தேன்”
உமேஷ் குமாரின் கண்களில் நீர்தேங்கியிருக்க, சென்னையிலிருந்து கிளம்புவதற்கான சிறப்பு ரயில் டிக்கெட்டை காண்பித்தார்
ஒடிஷா ரயில் விபத்தில் சிக்கிய உறவினர்களைப் பார்க்க, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயிலில் ஐந்து நபர்கள் இன்று(சனிக்கிழமை) பத்ரக் செல்கின்றனர்.
அவர்கள் அனைவரும் பிகாரின் வெவ்வேறு கிராமங்களில் இருந்து சென்னைக்கு வந்து தனியார் நிறுவனங்களில் அலுவலக உதவியாளர், சமையல் மற்றும் ஓட்டுநர் வேலைகளில் ஈடுபட்டவர்கள்.
தற்போது சிறப்பு ரயிலில் சென்றவர்கள் அனைவரும் தங்களது உறவினர்களுக்குச் சென்னையில் வேலை ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி கலந்த தமிழில் பிபிசி தமிழிடம் பேசிய உமேஷ் குமாரின் குரல் அவ்வப்போது உடைந்த, சோகம் கலந்த குரலாக இருந்தது.
”என் தம்பிக்காக வேலை பார்த்து வைத்திருந்தேன். அவனும் வாழ்க்கையில் முன்னேறிவிடுவான் என்று எங்கள் குடும்பம் நம்பியது. ரயில் விபத்தில் சிக்கியதில் காலில் பயங்கரமான காயங்கள் ஏற்பட்டிருப்பதால், கால்களைக்கூட அசைக்கமுடியவில்லை என்கிறான். இடது புறம் அவனது முகத்தில் மோசமான காயங்கள் இருப்பதாக சொல்கிறான்,” என்றார்.
உமேஷ் குமாரின் கண்களில் நீர் தேங்கியிருக்க, சென்னையிலிருந்து கிளம்புவதற்கான சிறப்பு ரயில் டிக்கெட்டை காண்பித்தார்.
பட மூலாதாரம், Getty Images
அதிகாலையில் அதிர்ச்சியைக் கொடுத்த செல்போன் அழைப்பு
”நான் 12 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் வேலைக்கு வந்தபோது ரூ.6,000 சம்பளம் கிடைத்தது. தற்போது ரூ.16,000 வரை சம்பாதிக்கிறேன். என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த என் தம்பி என்னைப் போல வேலைக்கு வர முடிவு செய்திருந்தான்.
ஆனால் அந்தப் பயணத்தில் அவன் இப்படி உயிர்போகும் நிலைக்குத் தள்ளப்படுவான் என்று எதிர்பார்க்கவில்லை,” என்கிறார் உமேஷ் குமார்.
சனிக்கிழமை அதிகாலை ஆறு மணிக்குத் தனது அலைபேசியில் மணியைப் பார்த்த உமேஷ் அதிர்ச்சி அடைந்ததாகச் சொல்கிறார்.
”என் தம்பி எனக்கு இரவு பலமுறை ஃபோன் செய்திருக்கிறான். நான் போனை சரியாகக் கவனிக்கவில்லை. காலையில் அழைத்தபோது அழுதுகொண்டே அவன் என்னிடம் பேசினான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் தம்பி உயிருடன் இருக்கிறான் என்பது எனக்கு ஒரு ஆறுதல். என்னைப் போல நூற்றுக்கணக்கானவர்கள் தங்களது சொந்தங்களை இழந்துவிட்டார்கள்,” என வருத்தத்துடன் சொல்கிறார் உமேஷ் குமார்.
தனது அண்ணன் மகனுக்கும் சென்னையில் சமையல் வேலை வாங்கித் தர திட்டமிட்டிருந்தார் வினோத் சௌத்ரி
“சமையல் வேலையில் சேர்த்துவிடத் திட்டமிட்டிருந்தேன்”
மற்றொரு பயணியான வினோத் சௌத்ரி தனது அண்ணன் மகன் பூபேஷை அழைத்து வந்து சென்னையில் சமையல் வேலையில் சேர்த்துவிடத் திட்டமிட்டிருந்தார். தற்போது பூபேஷ் மோசமான காயங்களுடன் இருப்பதாகச் சொல்கிறார்.
”நான் 10 ஆண்டுகளாக சென்னையில் வேலை செய்கிறேன். கிடைத்த எல்லா வேலைகளையும் செய்தேன் என்பதால், என் உறவினர்களை அழைத்து வந்து வேலைக்குச் சேர்ப்பதை ஓர் உதவியாகச் செய்து வந்தேன்.
தற்போது என் சொந்த அண்ணண் மகன் விபத்தில் சிக்கியிருக்கிறான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்று சொல்லித் தேம்புகிறார் வினோத் சௌத்ரி.
பட மூலாதாரம், Getty Images
சிறப்பு உதவி எண்
உமேஷ் குமார் மற்றும் வினோத் சௌத்ரி போல காயமடைந்தவர்களின் உறவினர்கள் குறித்த தகவல்களை தென்னக ரயில்வே துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.
பிபிசி தமிழிடம் பேசிய தென்னக ரயில்வேவின் மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ், ”சிறப்பு உதவி எண்ணில் இதுவரை 26 அழைப்புகள் வந்தன.
பெரும்பாலான அழைப்புகள் ரயில் ரத்தானது குறித்த விவரங்களை அறிவதற்கான அழைப்புகளாக இருந்தன. ஆறு நபர்கள் சிறப்பு ரயில் குறித்துக் கேட்டனர்.
எங்களிடம் நேரடியாக வந்து தகவல் தெரிவித்த ஐந்து நபர்களுக்கும் சிறப்பு பாஸ் வழங்கியுள்ளோம். அவர்கள் சென்னையிலிருந்து பத்ராக் சென்றுவிடுவார்கள்.
அதேபோல, பிகாரில் இருந்து சென்னைக்கு அழைத்து வருவதற்கு சிறப்பு ரயில் ஒன்றும் அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது. அந்த ரயில் நாளை காலை(ஞாயிற்றுக்கிழமை) ஒன்பது மணி அளவில் சென்னைக்கு வந்து சேரும்,” என்றார்.
ஒடிஷா ரயில் விபத்தில் சிக்கியவர்கள் குறித்த தகவல்களைப் பெற அழைக்க வேண்டிய உதவி எண்:
044- 25330952, 044- 25330953
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: