பெரும்பாலும் சிவப்பு சிக்னலை கவனிக்காமலோ, சிக்னல் தவறாலோ ரயில் தவறான பாதையில் சென்று விபத்துகள் நடக்கின்றன. அதுபோன்ற சமயங்களில் இந்தக் கருவி செயல்பட்டு அலாரம் அடித்து ரயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கும். அதன்பின் தானே செயல்பட்டு பிரேக்கை இயக்கி ரயிலை நிறுத்தி மோதலைத் தடுத்துவிடும்.
லெவல் கிராசிங்குகளை நெருங்கும்போது விசில் எழுப்பி அலெர்ட் ஆக்கும். குறித்த வேகத்தைவிட அதிவேகமாக ரயில் சென்றால், எச்சரித்து வேகத்தையும் குறைக்கும். பனிமூட்டமான நேரங்களில் பாதையே தெரியாது. அதுபோன்ற சூழல்களிலும் இது சிறப்பாக செயல்பட்டு மோதல்களைத் தடுக்கும். மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில் சென்றாலும், இதன் எச்சரிக்கைகள் துல்லியமாக இருக்கும்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே கவச் கருவி பொருத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக இதுவரை 65 ரயில்களில் இது பொருத்தப்பட்டுள்ளது. 134 ரயில் நிலையங்களிலும் 1,445 கி.மீ நீள தண்டவாளங்களிலும் கருவிகள் பொருத்தப்பட்டுவிட்டன. அதிக ரயில்கள் இயங்கும் பாதைகள், இடைவெளியே இல்லாமல் அடுத்தடுத்து ரயில்கள் செல்லும் பாதைகள் ஆகியவற்றுக்கு இப்போது முன்னுரிமை கொடுக்கிறார்கள். செலவு அதிகம் என்பதால், இந்தியா முழுக்க இது பயன்பாட்டுக்கு வர இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகலாம்.