- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
-
2025ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 18வது சீசனுக்கான புதிய விதிகளை ஐபிஎல் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி ஒரு அணி எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம், சர்வதேச கிரிக்கெட் விளையாடாத வீரர்களின் நிலை, அவர்களின் ஊதியம், ஏலத்தில் பங்கேற்று தேர்வான பின் பங்கேற்காத வீரர்களுக்கு தண்டனை விவரம், வீரர்களுக்கான புதிய போனஸ், அணிகளின் கையிருப்பு தொகை அதிகரிப்பு, ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பு என்பன உள்பட பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐ.பி.எல்.லில் வரும் புதிய விதிகள் சி.எஸ்.கேவைச் சேர்ந்த மூத்த வீரர் தோனிக்கு சாதகமா, பாதகமா? அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் அவர் விளையாடுவாரா?
ஐபிஎல் புதிய விதிகள் என்ன?
2025 – 2027 ஐபிஎல் சீசனுக்கான விதிகள் குறித்து முடிவு செய்ய பெங்களூருவில் நேற்று(செப்டம்பர் 28) ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டமும், அணி உரிமையாளர்களுடன் ஐபிஎல் நிர்வாகிகள் ஆலோசனையும் நடந்தது. இந்த ஆலோசனைக்குப் பின் புதிய விதிகள் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
1. ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்களின் அணி வீரர்கள் பட்டியலில் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதனை தக்கவைப்பு அல்லது ஆர்டிஎம் விதியின் மூலம் நடைமுறைப்படுத்தலாம்.
2. இந்த தக்கவைப்பு பட்டியலில் அதிகபட்சமாக 5 சர்வதேச வீரர்கள் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீரர்கள்) இருக்கலாம். அதிகபட்சமாக 2 சர்வதேச கிரிக்கெட் ஆடியிராத (அன்கேப்டு) வீரர்கள் இருக்கலாம்.
3. ஐபிஎல்-2025 ஏலத்தின் போது அணிகளின் கையிருப்புத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 2024 சீசனின் போது அணி ஏலத்தொகை மற்றும் ஊக்கத்தொகை என ரூ.110 கோடி இருந்தது. இனிவரும் சீசனில் ஏலத்தொகை, ஊக்கத்தொகை மற்றும் போட்டி ஊதியம் எனச் சேர்க்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் ரூ.146 கோடியும், 2026 சீசனில் ரூ.151 கோடியாகவும், 2027 சீசனில் ரூ.157 கோடியாகவும் உயர்த்தப்படும்.
4. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக போட்டி ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்பாக்ட் ப்ளேயர் உள்பட விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு போட்டியின் போதும் ரூ.7.50 லட்சம் வழங்கப்படும். இந்தத் தொகை ஒப்பந்த தொகையுடன் சேர்த்து வழங்கப்படும்.
5. வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டுமானால் கட்டாயமாக தங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை வெளிநாட்டு வீரர் பதிவு செய்யாமல் இருந்தால், அந்த வீரர் நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாட தகுதியற்றவராக கருதப்படுவார்.
6. ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்த எந்த வீரரும், ஏலத்தில் ஒரு அணியால் வாங்கப்பட்டபின், சீசன் தொடங்குவதற்கு முன்பாக தங்களால் விளையாட முடியாத நிலை இருப்பதாக அறிவிக்க நேர்ந்தால், அந்த வீரர் அந்தத் தொடரும் அடுத்து வரும் 2 ஐபிஎல் சீசனிலும் ஏலத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும்.
7. கேப்டு இந்திய வீரர் “அன்கேப்டு வீரராக” மாற முடியும். அதாவது சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அனுபவமுள்ள, ஓய்வு பெற்ற ஒரு வீரர் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 அணியில் பங்கேற்காமல் இருந்தால், பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறாமல் இருந்தால் அவர் “அன்கேப்டு வீரராக” மாறுவார். இந்த விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே செல்லும்.
8. இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை 2027 ஐபிஎல் சீசன் வரை தொடரும்.
புதிய விதிகள் தோனிக்கு சாதகமாக அமையுமா?
கேப்டு வீரர்களை “அன்கேப்டு வீரராக” கருதலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகக் குழு கொண்டுவந்த போது அதை பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கிரிக்இன்போ இணையதளம் தெரிவித்துள்ளது. மூத்த வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன பின் அவர்களை அன்கேப்டு வீரர்களாகக் கருதுவது அவர்களை அவமதிப்பு செய்வதாகும் என்று சன்ரைசர்ஸ் அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
அது மட்டுமல்லாமல் கேப்டு வீரராக இருந்து அதிக ஊதியம் பெற்று ஐபிஎல் தொடரில் விளையாடிய மூத்த வீரர் அன்கேப்டு வீரராக குறைந்த ஊதியம் எவ்வாறு பெறுவார் என்றும் நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனாலும் இந்த விதியை ஐபிஎல் நிர்வாகக்குழு மீண்டும் கொண்டு வந்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டது, ஆனால், இதில் எந்த வீரரும் தேர்ந்தெடுக்கப்படாததால் 2021-ஆம் ஆண்டு சீசனில் இந்த விதி நீக்கப்பட்டது. இப்போது 3 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த அன்கேப்டு விதிமுறையால், கடந்த 5 ஆண்டுகளாக எந்த சர்வதேச போட்டியிலும், இந்திய அணியின் எந்தப் பிரிவிலும், மத்திய ஒப்பந்தத்திலும் இடம் பெறாத மூத்த வீரர் அன்கேப்டு வீரராகக் கருதப்படுவார். இந்த விதிமுறை முக்கியமாக சிஎஸ்கேயின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை தக்கவைக்கவே கொண்டுவரப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தோனி ஊதியம் குறைய வாய்ப்பு – அடுத்த ஆண்டு விளையாடுவாரா?
2022ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது ரூ.12 கோடிக்கு எம்எஸ் தோனியை சிஎஸ்கே அணி தக்கவைத்தது. 2020ம் ஆண்டு இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார், வரும் ஜூலை மாதத்தோடு அவருக்கு 43 வயது பிறக்கிறது. தோனி கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல், மத்திய ஒப்பந்தத்திலும் இடம் பெறாமல் இருப்பதால் “அன்கேப்டு வீரராக” அவரை மாற்ற சிஎஸ்கே அணி முடிவு செய்யலாம்.
அன்கேப்டு வீரராக தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்தால் அவருக்கான அதிகபட்ச ஊதியம் ரூ.4 கோடியாகக் குறையும். ரூ.12 கோடி ஊதியத்திலிருந்து தோனிக்கு ரூ.8 கோடி குறையும். கடந்த 2023ம் ஆண்டு சீசனுக்கு பின் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு கடந்த சீசனில் தோனி விளையாடினார். சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.
அப்போது தோனி அளித்த பேட்டியில் “என் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய ஐபிஎல் தக்கவைப்பு விதிமுறையில் செய்யப்படும் மாற்றத்தைப் பார்த்துவிட்டு முடிவு செய்யும்” எனத் தெரிவித்திருந்தார். இப்போது புதிய விதிகள் வந்துள்ளதால், தோனியை அன்கேப்டு வீரராக களமிறக்க சிஎஸ்கே முடிவு செய்யலாம்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல், மத்திய ஒப்பந்தத்திலும் இல்லாத ஓய்வு பெற்ற பல இந்திய வீரர்கள் ஏலத்தில் இடம் பெறவும் வாய்ப்புண்டு. குறிப்பாக யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் ஏலத்தில் எடுக்கப்படலாம்.
வீரர்கள் காயத்தால் விலகினால் என்ன ஆகும்?
ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் அவர் சார்ந்திருக்கும் அணி மாற்று வீரரை 7-வது போட்டி முடிவதற்குள் அறிவிக்கலாம் என்று கடந்த சீசன் வரை நடைமுறையில் இருந்தது. புதிய விதிமுறையின்படி, 2025 ஐபிஎல் சீசனில் மாற்று வீரரை 12வது போட்டி முடிவதற்குள் அறிவிக்க வேண்டும் என நீட்டிக்கப்பட்டுள்ளது.
தக்கவைப்பு முறையிலும் புதிய மாற்றம்
வீரர்களைத் தக்கவைப்பு முறையிலும் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2025 சீசனில் ஒரு அணி அதிகபட்சமாக 5 கேப்டு வீரர்களை தக்கவைக்கலாம், அதிகபட்சமாக 2 அன்கேப்டு வீரர்களைத் தக்கவைக்கலாம். இதில் முதல் 3 வீரர்களைத் தக்க வைக்கும்போது அந்த வீரர்களுக்கான தொகை ரூ.18, ரூ.14, ரூ.11 கோடி என ஏலத் தொகை இருப்பிலிருந்து (பர்ஸ்) கழிக்கப்படும். அதன்பின் அடுத்த 2 வீரர்களுக்கு ரூ.18 மற்றும் ரூ.14 என கழிக்கப்படும். அன்கேப்டு வீரர் ஒருவருக்கு ரூ.4 கோடி கழிக்கப்படும், 2 அன்கேப்டு வீரர்களைத் தக்கவைத்தால் ரூ.8 கோடி பர்ஸிலிருந்து கழிக்கப்படும்.
2025 சீசனில் ஊதிய முறை
ஐபிஎல் வரலாற்றில் வீரர்களுக்கு முதல்முறையாக ஊதிய முறையை ஐபிஎல் நிர்வாகம் 2025 ஐபிஎல் சீசனில் கொண்டு வருகிறது. இதன்படி ஒர் அணியில் உள்ள 12 வீரர்களுக்கும் போட்டி ஒவ்வொன்றுக்கும் ரூ.7.50 லட்சம் ஊதியமாக வழங்கப்படும். இந்த ஊதியத் தொகைக்காக ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக ரூ.12.60 கோடி வழங்கப்படும். ஒரு வீரர் சீசனில் உள்ள அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினால் ஒப்பந்த தொகையை விட கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு