பட மூலாதாரம், BCCI/IPL
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. லக்னௌ அணியின் ஆட்டம் இன்றைய போட்டியில் தெளிவான திட்டமிடலுடன் இருந்தது நன்றாகவே வெளிப்பட்டது.
ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். மைதானம் ஒருபுறம் சவாலானதாக இருந்ததோடு, லக்னௌ அணியின் சாமர்த்தியமான பந்துவீச்சில் மிகவும் திணறிய ஹைதராபாத் 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை எடுத்தது.
தொடக்க பேட்ஸ்மேன்களாக மயங்க் அகர்வால், அம்மோல்ப்ரீத் சிங் களமிறங்கினார்கள். கைல் மேயர்ஸ் முதல் ஓவரை வீச வந்தார்.
ஹைதராபாத் அணிக்கான தொடக்கம் நன்றாகவே இருந்தது. ஆனால், அதேநேரத்தில் க்ருனால் பாண்ட்யாவும் பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை அசர வைத்தார்.
இரண்டாவது ஓவரில் ஜெய்தேவ் உனாத்கத் பந்துவீச்சில் மிட் ஆஃபில் ஷாட் அடித்து ஹைதராபாத் அணிக்கான சிக்சர் கணக்கைத் தொடங்கி வைத்தார் அம்மோல்ப்ரீத். மூன்றாவது ஓவரில் மயங்க் க்ருனால் பாண்ட்யா வீசிய பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்டார். ஆனால், அதற்கு அடுத்த பந்திலேயே மார்கஸ் ஸ்டாய்னிஸ் கைக்கு கேட்ச் கொடுத்து மயங்க் வெளியேறவே, அங்கிருந்து தொடங்கியது ஹைதராபாத்தின் வீழ்ச்சி.
களத்தில் அம்மோல்ப்ரீத் சிங், ராகுல் திரிபாதி இருவரும் நின்று விளையாடி, பவர் பிளே இறுதியில் ஹைதராபாத் அணியின் ரன் கணக்கை ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் என்ற நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.
ஆனால், ஹைதராபாத் லக்னௌவின் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. சன்ரைசர்ஸின் இன்றைய பேட்டிங் சுமாராகவே இருந்தது.
லக்னௌ மைதானம் பேட்டிங்கை பொறுத்தவரை சிக்கலானது என்றாலும், அந்த மைதானத்தின் தன்மையை உணர்ந்து லக்னௌ அணி பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலுமே அதைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டது.
அதன் விளைவாக, 8வது ஓவரை வீச வந்த க்ருனால் பாண்ட்யாவிடம் அம்மோல்ப்ரீத் சிங், எய்டன் மர்க்ரம் இருவரும் அடுத்தடுத்து வீழ்ந்து வெளியேறினார்கள்.
க்ருனால் பாண்ட்யா அந்த ஓவரில், அடுத்தடுத்து எடுத்த இரண்டு விக்கெட்டுகளுமே மிக முக்கியமானது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 26 பந்துகளில் 31 ரன்களை அடித்திருந்த அம்மோல்ப்ரீத் சிங் விக்கெட்டை எடுத்தது மட்டுமின்றி, மிக முக்கிய விக்கெட்டான மார்க்ரமையும் வீழ்த்தி ஆட்டத்தின் திசையையே மாற்றிவிட்டார்.
கேப்டன் களமிறங்கியது ஹைதராபாத் அணிக்கு ஓர் ஊக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கையை மார்க்ரமை டக் அவுட்டாக்கி உடைத்தார் க்ருனால் பாண்ட்யா.
அவரைப் போலவே, 9வது ஓவரில் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய், ஹேரி ப்ரூக் விக்கெட்டையும் வீழ்த்தி ஹைதராபாத்தை தவிக்கவிட்டார். ஹைதராபாத் பத்து ஓவர் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்களை எடுத்திருந்தது.
பேட்டிங்கில் நம்பிக்கையளித்த வீரர்களான மார்க்ரம், ஹேரி ப்ரூக் போன்றோர் ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் வெளியேற்றப்பட்டது எதிர்பார்க்கப்படாத ஒன்று. லக்னௌ தரப்பில் வேகப்பந்துவீச்சாளர்களான மார்க் வுட், ஆவேஷ் கான் ஆகியோர் அணியில் இன்று இடம்பெறவில்லை என்றாலும், க்ருனால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் திறமையாகச் செயல்பட்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
டாட் பால்கள் அதிகம் விழாமல் தடுத்து ஹைதராபாத் அணி சிங்கிள்ஸ் எடுக்க அதிகம் முயன்றிருக்க வேண்டும். பவுண்டரிக்கு பந்துகளை விரட்டும் வாய்ப்பு இல்லை என்னும்போது, டாட் பால்கள் விழாமலாவது தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.
எஸ்ஆர்ஹெச்சின் ரன் ரேட் மிக மோசமான நிலையில் இருந்தது. க்ருனால் பாண்ட்யா மூன்று விக்கெட்டுகளை எடுத்து, எதிரணியின் டாப் ஆர்டரை உடைத்தது மட்டுமின்றி ரன் ரேட்டையும் கடுமையாகக் கட்டுப்படுத்தினார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமித் மிஷ்ரா களமிறங்கியுள்ளார். ஆனால், அவரது ஃபார்ம் நன்றாக உள்ளது என்பதை, யஷ் தாக்கூர் பந்துவீச்சில் ராகுல் திரிபாதி அடித்த பந்தை கேட்ச் பிடித்து நிரூபித்தார். ராகுல் திரிபாதியை தொடர்ந்து ஹைதராபாத் அப்துல் ஷமாதை களமிறக்கியது.
ஆனால், 18வது ஓவரில்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைத் தொட்ட ஹைதராபாத் அணிக்கு நம்பிக்கை ஒளி நெடுந்தொலைவில் மங்கிக்கொண்டே இருந்தது. நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தரையும் 19வது ஓவரில் அமித் மிஷ்ரா வெளியேற்றினார்.
களமிறங்கிய ஆதில் ரஷீத், அமித் ரஷீத் பந்துவீச்சில் பவுண்டரி ஷாட் ஒன்றை அடித்து தனது ஆட்டத்தைத் தொடங்கினார். ஆனால், அதே ஓவரில் அவரது விக்கெட்டை வீழ்த்திக் காட்டினார் மிஷ்ரா.
கே.எல். ராகுல் 19வது ஓவரை வேகப்பந்துவீச்சாளருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் சுழற்பந்துவீச்சாளருக்கு கொடுத்து ஆதில் ரஷீத் உட்பட இரண்டு விக்கெட்டுகளை அந்த ஓவரில் எடுத்தார். அமித் மிஷ்ராவை இறக்கியதற்கான வேலையை அவர் செய்துவிட்டார். அடுத்ததாக அவருக்குப் பதிலாக ஆயுஷ் பதானி இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டார்.
120க்கும் மேல் ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் அப்துல் ஷமாத் குறைந்தபட்சம் 120 வரைக்குமேனும் எஸ்.ஆர்.ஹெச்-இன் ரன் கணக்கை கொண்டு செல்ல வாய்ப்பிருந்தது.
அதற்கு ஏற்றாற்போல் அப்துல் ஷமாத், அணியின் ரன் கணக்கை 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை எடுக்க வைத்தார். லக்னௌ அணிக்கு 122 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
லக்னௌ அணியின் ரன் ரேட்டை தடுப்பதில் போராட்டம்
லக்னௌ அணியை இரண்டாவது இன்னிங்ஸில் ரன் குவிக்கவிடாமல் தடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் ஹைதராபாத் இருந்தது.
ஆனால், முதல் ஓவரிலேயே வைட் பால், பவுண்டரி, சிங்கிள்ஸ், டபுள்ஸ் என்று அடுத்தடுத்து ரன்களை கொடுத்தார் புவனேஸ்வர் குமார். முதல் இன்னிங்ஸில் அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கோடு ஒப்பிடுகையில், முதல் ஓவரில் இப்படி சாவகாசமாக வீசுவது டி20 போட்டியில் மன்னிக்க முடியாத தவறு.
ரன் ரேட்டை 8 என்ற அளவிலேயே பராமரித்துக் கொண்டிருந்த லக்னௌ பவர் பிளே முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களை எடுத்திருந்தது. புவனேஸ்வர், வாஷிங்டன் சுந்தர் இருவரும் முதல் இரண்டு ஓவர்களிலேயே 24 ரன்களை வாரி வழங்கியிருந்தார்கள்.
பட மூலாதாரம், BCCI/IPL
மர்க்ரம், ஃபரூக்கி இருவரும் தொடர்ச்சியாக அடுத்த நான்கு ஓவர்களில் ரன் ரேட்டை கட்டுப்படுத்த முயன்ற போதிலும் கே.எல்.ராகுல் , மேயர்ஸ் இருவரும் அவர்களது ஓவர்களில் ஆளுக்கொரு பவுண்டரி அடித்து ரன் ரேட்டை தக்க வைத்துக்கொண்டார்கள்.
கைல் மேயர்ஸ் விக்கெட்டை 5வது ஓவரில் ஃபரூக்கி எடுத்தார். அதைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே புவனேஸ்வர் தீபக் ஹூடாவை அவரே கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இருப்பினும், வந்த வேகத்தில் தீபக் ஹூடா தனது பங்குக்கு ஒரு சிக்ஸ் அடித்துவிட்டு வெளியேறினார்.
கே.எல்.ராகுல் நிதானமாக களத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்தார். 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை எடுத்து, இலக்கை வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தார்கள் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ்.
20 ஓவர்களில் ஹைதராபாத் 10 பவுண்டரி, மூன்று சிக்சர்களை அடித்தனர். ஆனால், லக்னௌ 10 ஓவர்களிலேயே 10 பவுண்டரி 2 சிக்சர்களை அடித்திருந்தனர். ஒருவேளை ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்களும் இந்த அளவுக்கான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருக்க முடியும்.
இருப்பினும் மைதானத்தின் தன்மையறிந்து திட்டமிட்ட ஆட்டத்தை லக்னௌ வெளிப்படுத்தியதால், அவர்கள் அதையும் உடைத்திருக்க வாய்ப்புள்ளது.
முதல் இன்னிங்ஸில் பேட்டிங் நிலைமை எப்படியுள்ளது என்பதைக் கணித்து இரண்டாவது இன்னிங்ஸில் அதற்கு ஏற்ப திட்டமிட்டிருக்கலாம். அதை லக்னௌ அணி சிறப்பாகச் செய்தது. கே.எல்.ராகுல், க்ருனால் கூட்டணி பவுண்டரி ஷாட்களை அதிகமாக அடிக்க முடியாது என்பதை உணர்ந்து தங்களை எதிர்நோக்கி வந்த ஒவ்வொரு பந்தையுமே சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார்கள்.
கே.எல்.ராகுல் 12 ஓவர் முடிவில் 34 ரன்களை எடுத்திருந்தார். ஆனால், அவர் அடித்தது ஒரேயொரு பவுண்டரி மட்டுமே. 29 பந்துகளில் நிதானமாக நின்று ரன் எடுத்துக்கொண்டிருந்தார். இன்னொரு புறம், க்ருனால் பாண்ட்யாவும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என்று அடித்தவர், 22 பந்துகளில் 34 ரன்களை எடுத்திருந்தார்.
ஆனால், அதற்கு அடுத்த ஓவரிலேயே ஆஃப் ஸ்டம்ப் பக்கமாக உம்ரான் மாலிக் வீசிய பந்தை பவுண்டரிக்கு அனுப்ப முயன்றபோது அவுட்டாகி வெளியேறினார்.
இருவரது கூட்டணி லக்னௌ அணி ரன் ரேட்டை தக்க வைக்கப் பெரிதும் உதவியது. அவருக்குப் பிறகு களமிறங்கிய ஸ்டாய்னிஸ் உம்ரான் வீசிய வைட் பாலில் ஃபோர் அடித்து ஒரே பந்தில் ஐந்து ரன்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பவுண்டரி.
கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிவிட்டதாலும் இன்னும் விக்கெட்டுகள் பாக்கியிருந்ததாலும் அச்சமேதுமின்றி இருந்த ஸ்டாய்னிஸ் தனது ஆட்டத்தில் நிதானத்தைக் காட்டவில்லை.
15வது ஓவரில் அடுத்தடுத்து ராகுல், ஷெப்பர்ட் ஆகியோரை ஆதில் ரஷீத் அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய நிகோலஸ் பூரண், 16வது ஓவர் முடிவில் நடராஜன் வீசிய பந்தில் ஸ்டைலான ஒரு சிக்சருடன் ஆட்டத்தை முடித்து வைத்தார்.
நிதானமாக இலக்கை அடைந்த லக்னௌ
ஒருவேளை ஹைதராபாத் அணி, மிடில் ஓவரில் இன்னும் சாமர்த்தியமாக விளையாடியிருந்தால், பெரிய ஷாட்களை ஆடாமல் சிங்கிள்ஸ் அதிகமாக ஓடி, டாட் பால்களை கொடுக்காமல் இருக்க முயன்றிருந்தால், இந்த மைதானத்தில் இன்னும் கூடுதலாக ரன் சேர்த்திருக்க முடியும்.
அதைச் செய்ய முடியாமல் போனது அவர்களது தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம். இருப்பினும், அதற்கு ஈடாக இரண்டாவது இன்னிங்ஸில் ரன் ரேட்டை கட்டுப்படுத்தி வெற்றியைச் சாத்தியப்படுத்தியிருக்கலாம். அதற்கான வாய்ப்பும் இருந்தது.
ஆனால், லக்னௌவின் ரன் ரேட்டை கட்டுப்படுத்துவதில் புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், ஆதில் ரஷீத் ஆகியோர் சிறப்பாகச் செயல்படவில்லை.
கடைசி இரண்டு போட்டிகளில் குறிப்பிடத்தக்க ரன்களை அடிக்காத கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் அதிக ரன்களை நிதானமாகக் குவித்தார். க்ருனால் பாண்ட்யாவுடன் நல்ல கூட்டணி அமைத்து முதல் 10 ஓவர்களிலேயே கிட்டத்தட்ட இலக்கை அடைந்துவிட்டார்கள்.
ஆனால், அத்தகைய கூட்டணியை ஹைதராபாத் வீரர்களால் அமைக்க முடியாமல் போனதையும் அவர்களது தோல்விக்கு ஒரு காரணமாகக் கூறலாம்.
பவர் பிளே இறுதியில் இரண்டு விக்கெட்டுளை வீழ்த்தியபோது வெற்றிக்கான வாய்ப்பு தெரிந்தது. ஆனால், லக்னௌ வீரர்களுடைய பேட்டிங் திறமை, விக்கெட் எடுப்பதை சவாலானதாக்கியது மட்டுமின்றி ரன் ரேட்டையும் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
லக்னௌ அணி சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடினார்கள். ரவி பிஷ்னோய், நீண்ட காலத்திற்குப் பிறகு ஆடிய அமித் மிஷ்ரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹைதராபாத் அணி இன்னும் முழுமையாக நிலைகொண்ட அணியாக இல்லாததும் இந்தத் தோல்விக்கு ஒரு காரணம்.
அதன் விளைவாக, லக்னௌ அணி 16 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை நிகோலஸ் பூரணின் சிக்சரோடு ஸ்டைலாக தழுவியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: