பெங்களூர், மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில், 172 ரன்கள் என்ற இலக்கை 16.2 ஓவர்களில் முடித்து, விராட் கோலி, டுப்ளெஸ்ஸி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்து தனது இன்னிங்ஸை முடித்தது. அதைத் தொடர்ந்து 172 ரன்கள் என்ற இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பெங்களூரு அணி சாவகாசமாக வெற்றியை ருசித்துள்ளது.
ஆர்சிபி சொந்த ஊரில் விளையாடிய ஐபிஎல் முதல் போட்டியில் ஆட்டம் முழுக்க ஆதிக்கம் செலுத்தி எடுத்துள்ள வெற்றி இது. அதுவும் சாதாரண வெற்றியல்ல, பிரமாண்டமான வெற்றி.
‘சேஸ் மாஸ்டர்’ விராட் கோலியும் டுப்ளெஸ்ஸியும் மட்டுமே இணைந்து ஆட்டத்தை முடித்துவிட்டார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியில் இளம் வீரர்களின் திறமை வெளிப்பட்டது என்றால், பெங்களூருவில் மூத்த வீரர்களின் அனுபவம் அபாரமாக வெளிப்பட்டது.
விராட் கோலி ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்குவார், பிறகு அதிரடியாக வெளுப்பார். டுப்ளெஸ்ஸி ஆரம்பத்தில் இருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவருடைய அனுபவமும் ஆர்சிபியின் முதல் போட்டியை ரசிகர்களுக்கு மறக்க முடியாத போட்டியாக மாற்றியது.
மும்பை அணி பவர் பிளேவில் முழுமையாக ஆடவில்லை. வழக்கம்போல மும்பை இந்தியன்ஸ் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளனர். தொடர்ச்சியாக 11வது முறையாக முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
ஆனால், திலக் வர்மா இந்தியாவுக்கு கூடிய விரைவில் ஆடிவிடுவார் என்ற அளவிலான திறமையை வெளிப்படுத்தினார். அவர் தொடங்கிய முதல் பந்து முதல் இறுதிப் பந்து வரை சிறப்பாக ஆடினார்.
விராட் கோலி – டுப்ளெஸ்ஸியின் அதிரடி
மும்பை அணியின் இம்பாக்ட் பிளேயராக ஜேசன் பெரென்டிரோஃப் களமிறக்கப்பட்டார். அவரது பந்துவீச்சில் முதல் ஓவரை நிதானமாக இருவருமே சிங்கிள்ஸ் எடுத்தபடி எதிர்கொண்டார்கள்.
இடது கை பந்துவீச்சாளரான அர்ஷாத் கான் இரண்டாவது ஓவரை வீசினார். அவர் வீசிய இரண்டாவது பந்தை கோலி பவுண்டரிக்கு பறக்கவிட்டார். அந்த ஒரு ஓவரில் கோலி, டுப்ளெஸ்ஸிஸ் கூட்டணி 9 ரன்களை எடுத்தது.
அதுவரை நிதானமாக நின்றுகொண்டிருந்த டுப்ளெஸ்ஸிஸ், மூன்றாவது ஓவர் தொடங்கியதும் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸ் என அதிரடியாக இறங்கி ஆடத் தொடங்கினார்.
தனது பங்குக்கு விராட் கோலியும் அதற்கு அடுத்த ஓவரில் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் என்று தனது அதிரடியைத் தொடங்கினார். ஜோஃப்ரா ஆர்ச்செரை நிலைகொள்ளவிடாமல் விராட் கோலி தொடர்ச்சியாக பந்துகளை விளாசிக் கொண்டேயிருந்தார்.
பவர் பிளே முடிவில் ஆர்சிபி விக்கெட் ஏதும் இழக்காமல் 53 ரன்களைக் குவித்திருந்தது.
டுப்ளெஸ்ஸி அடித்து விளாசிக் கொண்டிருந்தார். பந்துகள் அடுத்தடுத்து சிக்ஸருக்கு பறந்தன. மிகச் சாமர்த்தியமாக விளையாடியவர் வீசப்படும் பந்தைக் கணக்கிட்டு விளையாடினார். பத்து ஓவர் முடிவில் பெங்களூரு அணி 97 ரன்களை எடுத்திருந்தது.
வதேரா தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்களை அடித்துவிட்டு, அடுத்த சில நிமிடங்களிலேயே அவுட்டானார். ஆனால், அடுத்தடுத்து சிக்ஸ் அடித்துக்கொண்டே இருந்த கோலியும் டுப்ளெஸ்ஸியும் விக்கெட் கொடுக்காமல் விளையாடியது அவர்களது அனுபவத்தின் சிறப்பை வெளிப்படுத்தியது.
பத்து ஓவர் முடிவில் டுப்ளெஸ்ஸிஸ் மொத்தம் 5 சிக்ஸ், 4 பவுண்டரிகளை அடித்திருந்தார். விராட் கோலி ஒரு சிக்ஸ், நான்கு பவுண்டரிகளை அடித்திருந்தார். டுப்ளெஸ்ஸிஸ் மிகக் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்து மிரட்டலாக களத்தில் நின்றுகொண்டிருந்தார்.
கூட்டணியில் 100 ரன்களைக் கடந்த கோலி-டுப்ளெஸ்ஸி
கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பெங்களூரு மைதானத்தில் விராட் கோலி விளையாடியுள்ளார். அந்த மைதானத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இப்படியான ஒரு தொடக்கம்தான் பெங்களூரு அணிக்குத் தேவையாகவும் இருந்தது.
11வது ஓவரில் மீண்டுமொரு சிக்ஸ் அடித்து ரசிகர்களுக்கு உற்சாகமளித்தார் விராட் கோலி. ஆட்டம் சென்ற போக்கு விக்கெட் ஏதும் இழக்காமல் கோலியும் டுப்ளெஸ்ஸிஸுமே வெற்றியை ருசித்துவிடுவார்களோ என்பதைப் போல் இருந்தது.
கோலி, டுப்ளெஸ்ஸி கூட்டணி மொத்தமாக 148 ரன்களை எடுத்தது. இருவரும் சேர்ந்து இந்த ஐபிஎல் தொடரின் முதல் 100 ரன் எடுத்த கூட்டணியாக களத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தார்கள்.
களத்தில் அவுட் ஆகாமல் நின்ற தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே தனித்தனியாக அரை சதங்களை அடித்திருந்தனர். கூட்டணியாக 100 ரன்களைக் கடந்திருந்தனர்.
இன்னும் 42 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அதையும் நாங்களே எடுத்துவிடுகிறோம் எனக் கூறி இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள்.
விராட் கோலியிடம் இருந்து வெளிப்பட்ட அமர்க்களமான பேட்டிங், பெங்களூரு ரசிகர்களின் கண்களுக்கு நிச்சயம் குளிர்ச்சையைக் கொடுத்திருக்கும். சேஸ் மாஸ்டர் விராட் கோலி, 15வது ஓவரிலும் அர்ஷத் கான் வந்தவுடனேயே அவரது பந்தில் பிரமாண்ட சிக்ஸ் ஒன்றைப் பறக்கவிட்டார்.
அதற்கு அடுத்து இரண்டாவது பந்திலேயே கேட்ச் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆனால், ரித்திக் ஷோகீன் அந்த வாய்ப்பை நழுவவிடவே கோலியின் விக்கெட் காப்பாற்றப்பட்டது. அந்த நேரத்தில் மிகக் கடினமான கேட்ச் ஒன்றை டுப்ளெஸ்ஸி பிடித்ததுதான் நினைவுக்கு வந்தது.
அவர் ஃபீல்டிங்கை சிறப்பாகச் செய்துவிட்டு, பேட்டிங்கிலும் வந்து கலக்கிக்கொண்டிருந்தார். முதல் இரண்டு ஓவர்களை பந்துவீச்சாளர்களுக்குக் கொடுத்த டுப்ளெஸ்ஸி அதன் பிறகு சாமர்த்தியமாக விளையாடி ரன்களைக் குவித்துக் கொண்டேயிருந்தது அவரது அனுபவத்தைக் காட்டியது.
டுப்ளெஸ்ஸியை வெளியேற்றிய அர்ஷத் கான்
15வது ஓவர் வரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த, மும்பையைத் தவிக்க விட்டுக்கொண்டிருந்த டுப்ளெஸ்ஸியின் விக்கெட்டை, அந்த ஓவரில் எடுத்துக் கொடுத்தார் அர்ஷத் கான். சிக்ஸ் போகும் என்று எதிர்பார்த்த பந்தை டிம் டேவிட் கேட்ச் பிடித்து மிகவும் மதிப்புவாய்ந்த விக்கெட்டை எடுத்தார்.
டுப்ளெஸ்ஸி 43 பந்துகளில் 73 ரன்களை எடுத்து அவுட்டானார். பெங்களூரு அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. 15 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பில் 148 ரன்களை எடுத்திருந்தது.
இன்னும் நான்கு சிக்ஸ் அடித்தால் ஆட்டம் முடிந்துவிடும் என்ற நிலையில் பெங்களூரு அணி இருந்தது. மூன்றாவதாகக் களமிறங்கினார் தினேஷ் கார்த்திக். ஆனால், வந்த வேகத்தில் கேமரூன் கிரீன் பந்துவீச்சில் திலக் வர்மா கைக்கு கேட்ச் கொடுத்து வெளியேறிவிட்டார்.
பெங்களூரு இரண்டு விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்திருந்தது. 27 பந்துகளில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில் கிளென் மேக்ஸ்வெல் களத்திற்குள் நுழைந்தார். அவர் இறங்கிய வேகத்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்தார்.
6 பவுண்டரி, 5 சிக்ஸ் அடித்து 82 ரன்களோடு அவுட்டாகாமல் நின்ற விராட் கோலியின் அதிரடி ஆட்டம் ஆர்சிபியின் வெற்றிக்கு வேராக அமைந்தது. டுப்ளெஸ்ஸியும் கோலியும் கூட்டணி அமைத்து ஒருவருக்கு ஒருவர் அவகாசம் கொடுத்து எதிரணியின் பலவீனங்களைத் திறம்படப் பயன்படுத்தினார்கள்.
பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்திய போட்டியில், நிர்ணயிக்கப்படும் இலக்கை எப்படி சேஸ் செய்ய வேண்டும் என்பதை எதிரணிக்குக் கற்றுக்கொடுப்பதைப் போல் ஆடினார் விராட் கோலி.
22 பந்துகள் பாக்கியிருந்த நிலையில், 17வது ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸ் அடித்து ஆர்சிபியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த ஐபிஎல் போட்டியில் இவ்வளவு சிறப்பான முதல் போட்டியைக் கொடுத்து, தரமான ஆட்டத்தை விராட் கோலி, டுப்ளெஸ்ஸி வெளிப்படுத்தினார்கள்.
இதே வேகத்தோடு அடுத்தடுத்த போட்டிகளிலும் பெங்களூரு அணி தனது திறமையைக் காட்டினால் இந்த முறை கோப்பை அவர்களுக்குத்தான் என்று எதிர்பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: