மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி குஜராத் உடனான தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னௌ அணியை எதிர்கொள்கிறது.
இதில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. லக்னௌ அணியும் அதன் தொடக்க ஆட்டத்தில் டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதே உத்வேகத்தோடு பந்துவீச்சைத் தேர்வு செய்த கே.எல்.ராகுல் மற்றும் அவரது அணியினர் உற்சாகத்துடன் களத்திற்கு வந்தனர்.
சென்னை அணிக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடக்கும் போட்டி இது. அதுமட்டுமின்றி, சொந்த மண்ணில் அவர்கள் வெற்றி பெற்று நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே களமிறங்கினார்கள்.
பவர் பிளேவில் லக்னௌவை பந்தாடிய கெய்க்வாட்
முதல் ஓவரை வீச வந்தார் கைல் மேயர்ஸ். ஆனால், ஆட்டம் தொடங்கும் நேரத்தில் மைதானத்திற்குள் நாய் ஒன்று ஓடி வந்ததால் சிறிது தாமதம் ஆனது. இதேபோன்ற சம்பவம் சில வாரங்களுக்கு முன்பு, இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டிகளிலும் நடந்தது. ஐந்து நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய முதல் ஓவரில் சென்னை 6 ரன்களை எடுத்தது.
ஆனால், ஆவேஷ் கான் வீசிய இரண்டாவது ஓவரில், வைட், நோ-பால் என்று வீசியதோடு, ரன்களையும் வாரி வழங்கினார். அந்த ஒரு ஓவரில் மட்டும் 17 ரன்களைக் கொடுத்தார் ஆவேஷ் கான். அதைத் தொடர்ந்து மூன்றாவது ஓவரிலும் மேயர்ஸ் வீசிய பந்துகளில் 10 ரன்களை கெய்க்வாட், கான்வே கூட்டணி குவித்தது.
பவர் பிளே கட்டத்தின் 5வது ஓவரை வீசிய கௌதம், அந்த ஒரு ஓவரிலேயே 20 ரன்களைக் கொடுத்தார். அதே வேகத்தோடு பவர் பிளேவின் இறுதி ஓவரையும் ஆடிய சிஎஸ்கே அதிலும் 19 ரன்களைக் குவித்தது. முதல் ஆட்டத்தோடு ஒப்பிடுகையில், இந்த முறை பவர் பிளேவை ஓரளவுக்கு நன்றாகவே சென்னை அணி பயன்படுத்தியுள்ளது என்று கூறலாம்.
அதேவேளையில் லக்னௌ தரப்பில் பந்துவீசிய கௌதம், மார்க் வுட், ஆவேஷ் கான் ஆகியோரும் அதிக ரன்களைக் கொடுத்துவிட்டார்கள். களத்தில் தொடர்ந்து எதிர்பார்த்த பேட்டிங்கை வெளிப்படுத்திக்கொண்டிருந்த கெய்க்வாட், 8வது ஓவரில் 25 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். கெய்க்வாட் அரை சதம் அடித்ததைத் தொடர்ந்து கான்வேவும் தனது பங்குக்கு அந்த ஓவரில் இரண்டு சிக்சர்களை அடித்து க்ருனல் பாண்டியாவின் ஓவரை முடித்து வைத்தார்.
ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களை சாமர்த்தியமாக எதிர்கொண்டார். ஆனால், 10வது ஓவரில் ரவி பிஷ்னோய் வீசிய பந்தை அடித்தபோது அதைத் துல்லியமாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் மார்க் வுட். ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில் 57 ரன்களை எடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே மார்க் வுட் பந்துவீச்சில் க்ருனல் பாண்டியா கைக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார் டெவோன் கான்வே. 29 பந்துகளில் 47 ரன்களை எடுத்து வெளியேறினார் கான்வே. களத்தில் ஷிவம் துபேவும் மொயீன் அலியும் இருந்தார்கள்.
11 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 120 ரன்களை எடுத்திருந்தது. ஷிவம் துபே ஆட்டத்தைத் தொடங்கிய முதல் ஓவரில் நிதானமாக நின்றுகொண்டிருந்தவர், 13வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அடித்து அணிக்கு நம்பிக்கையளித்தார். 14வது ஓவரிலும் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் அடித்தார்.
அவர் 13, 14 ஆகிய ஓவரில் பந்துகளை பவுண்டரிக்கு தட்டிவிடுவதும் பறக்க விடுவதுமாக இருந்ததன் மூலம், 3வது விக்கெட்டாக களத்திற்குள் தோனி அவரை எந்த நம்பிக்கையில் இறக்கினாரோ அதே நம்பிக்கையைத் தன் மீது துபே கொண்டிருந்தார் என்பதை அவரது பேட்டில் பட்டுப் பறந்த பந்துகள் காட்டின.
ஆனால், அதே ஓவரில் தொடர்ந்து துபே போட்ட ஷார்ட் பால்களை அவர் தவறாகக் கணக்கிட்டுவிட்டாரோ என்ற கேள்வியும், அவரது விக்கெட்டை பிஷ்னோய் எடுத்தபோது எழவே செய்தது. அவர் இதைச் செய்வார் என எதிர்பார்த்தே போட்ட பிஷ்னோய் அவர் திட்டமிட்டதைப் போலவே துபேவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
அருமையான ஷார்ட் பாலை சரியாகக் கணிக்காமல் அடித்த துபேவை, அருமையாக கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் மார்க் வுட். துபே 16 பந்துகளில் 27 ரன்களை எடுத்து வெளியேறினார். களத்தில் இரண்டு இங்கிலாந்து பேட்டர்கள் இருந்தார்கள். பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி இருவருமே அதிக டி20 போட்டிகளை விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.
தோனியின் சரவெடியுடன் நிறைவடைந்த சென்னை பேட்டிங்
மொயீன் அலியின் ஆட்டத்தில் அது வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. பெரிய மைதானமான சென்னை மைதானத்தில் அடுத்தடுத்து பவுண்டரிக்கு பந்தைத் தட்டிவிட்ட மொயீன் அலி, 12 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார். அதில் மூன்று பவுண்டரிகளும் அடக்கம். சென்னை அணி 15 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்திருந்தது.
ஆட்டம் தொடங்கியபோது 180 அல்லது 190 என்ற அளவில் சென்னை எடுக்கும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், கெய்க்வாட், கான்வே, துபே என்று அடுத்தடுத்து வந்த பேட்டர்களின் ஆட்டம், 219 வரை ரன் எடுக்கலாம் என்ற நிலைக்கு சென்னையை உயர்த்தியது.
இந்த நம்பிக்கை ஒளி தெரிந்துகொண்டிருந்த நேரத்திலேயே பந்துவீச வந்த பிஷ்னோய் மிக அழகாக, மிக முக்கியமான விக்கெட்டான மொயீன் அலியை அவுட்டாக்கி வெளியேற்றினார். மொயீன் அலி, 13 பந்துகளை எதிர்கொண்டு மூன்று பவுண்டரிகளை விளாசி, 19 ரன்களை எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸுடன் கூட்டணி சேர்ந்தார் அம்பத்தி ராயுடு.
சென்னை அணியிடம் பேட்டிங்கை பொறுத்தவரை தெளிவான திட்டம் உள்ளதைப் போல் தெரிந்தது. யார் வந்தாலும் அதிரடி ஆட்டத்தை இறங்கி வெளிப்படுத்த வேண்டும் என்ற அணுகுமுறையைக் கடைபிடித்துக்கொண்டிருந்தார்கள்.
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, துபே, மொயீன் அலி என்று ஆடிய ஒவ்வொரு வீரருமே அடுத்தடுத்து இறங்கி ஆடிக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் 17வது ஓவரில் தனது முதல் பவுண்டரியை அடித்தார். ஆனால், சென்னை பேட்டர்கள் அப்படி இறங்கி அடிக்க முயன்று அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறிக் கொண்டிருந்தார்.
ஆவேஷ் கான் வீசிய 17வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்த பென் ஸ்டோக்ஸ், மூன்றாவது பந்தையும் அதேபோல் அடிக்க, அதை அழகாக கேட்ச் பிடித்தார் யஷ் தாக்கூர். ஆவேஷ் கான் பந்துவீச்சு இன்று சற்று மோசமாகத்தான் இருந்தது. நிறைய ரன்களைக் கொடுத்திருந்தார். இருப்பினும் மூன்று ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில், முக்கியமான விக்கெட்டை எடுத்துக்கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து ஜடேஜா களமிறங்கினார். 18வது ஓவரை 65 மீட்டர் தொலைவுக்கு அருமையான சிக்ஸ் அடித்துத் தொடக்கி வைத்தார் அம்பத்தி ராயுடு. மார்க் வுட் வீசிய அந்தப் பந்து வந்த வேகத்திற்கு ஏற்ப அதை ஆஃப் ஸ்டம்ப் பக்கமாக, விரைவாகவே துல்லியமாகவும் சிக்ஸ் அடித்தார்.
அம்பத்தி ராயுடு மீண்டுமொரு சிக்ஸ் அடித்தார். மார்க் வுட்டின் பந்தை சரியாகப் புரிந்துகொண்டு இறங்கி வந்து, லாங் ஆன் சிக்ஸ் ஒன்றை அடித்தார். சென்னை, 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்திருந்தது. இறுதி ஓவரின் முதல் பந்தில் மார்க் வுட் ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
அதற்கு அடுத்ததாக களமிறங்கினார் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கேப்டன் தோனி. இறங்கியதும் அடுத்தடுத்து இரண்டு அட்டகாசமான சிக்ஸர்களை அடித்தார். அதிலும் இரண்டாவது சிக்ஸரை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. மஞ்சள் சட்டை படையின் திருவிழாக் கொண்டாட்டம் தொடங்கியது.
மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் போட்டிகளில் தனது 5000 ரன்களை சென்னை மைதானத்தில் பூர்த்தி செய்தார். களத்திற்குள் வந்தார், இரண்டு அருமையான சிக்ஸர்களை அடித்தார், அவர் எதிர்கொண்ட மூன்றாவது பந்தில் ரவி பிஷ்னோய் கைகளுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால், அந்த இரண்டு சிக்ஸர்களுக்கான ரசிகர்களின் கொண்டாட்டக் கூச்சல் மட்டும் ஓய்ந்தபாடில்லை.
20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: