துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 13-ம் தேதி அகமதாபாத்தில் முடிவடைந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான தொடரில் அஸ்வின் ஒட்டுமொத்தமாக 25 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார். இதன் வாயிலாக ஐசிசி டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் அஸ்வின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தரவரிசைபட்டியலில், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தார் அஸ்வின். ஆனால் தற்போது ஆண்டர்சனை விட கூடுதலாக 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தை அடைந்துள்ளார். அஸ்வின் 869 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 859 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட் போட்டியிலும் கலந்து கொள்ளாத ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 841 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறார்.
இந்தியாவின் அக்சர் படேல்6 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் அக்சர் படேல் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 8 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை அடைந்துள்ளார். அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 186 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போட்டியில் சதம் விளாசிய ஷுப்மன் கில்17 இடங்கள் முன்னேறி 46-வது இடத்தை பிடித்துள்ளார்.