பெரும்பாலானவர்கள் `இம்போஸ்டர் சிண்ட்ரோம் (Imposter Syndrome) ‘ என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதை அனுபவித்திருப்பார்கள். எவ்வளவுதான் சிறப்பாக உழைத்தாலும், ‘நாம சரியா பண்ணலை, இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாம்’ என்ற போதாமை மனதில் ஒட்டிக்கொண்டே இருக்கும் மனநிலைதான் இது.
சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு `நீ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க வேண்டும்’ என்று இலக்கு நிச்சயிக்கும் பெற்றோர் அதிகம். 100 மதிப்பெண்கள், ஃபர்ஸ்ட் ரேங்க் என்று குழந்தைகளுக்கு, எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்ற அழுத்தம் தருவது, மற்றவர்களுடனான ஒப்பீடு ஆகியன, ஒரு கட்டத்தில் அவர்கள் வளர்ந்த பின் நாளடைவில் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தலாம். அத்துடன், அவர்கள் செய்யும் வேலையில் மனநிறைவின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ’இம்போஸ்டர் சிண்ட்ரோம்’ பிரச்னை இருப்பவர்கள் இதைதான் எதிர்கொள்வார்கள்.
இந்த உளவியல் சிக்கலிலிருந்து எப்படி விடுபடலாம் என்பது பற்றி, உளவியல் நிபுணர் சமீத்தா ஜெயினிடம் பேசினோம்.
“இம்போஸ்டர் சிண்ட்ரோம் எனும் உளவியல் பிரச்னையில் இருக்கும் ஒருவர், தன்னைத் தானே சுய விமர்சனம் செய்து கொள்வார். அவர் எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும், இந்த உலகமே அவரை கொண்டாடினாலும், மனநிறைவு இல்லாமையை வெளிப்படுத்துவார்.
தனது கடின உழைப்பால் வெற்றியை அடைந்திருந்தாலும், அதற்குக் காரணம் சூழ்நிலை மற்றும் வேறு நபர்கள்தான் என்று எண்ணுவார். எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தாலும், `இந்த வெற்றிக்கு நான் தகுந்தவனா?’ என்று சுய சந்தேகப்படுவார். அதோடு, சாதனைகள் செய்தாலும் கொண்டாட்டங்கள் இன்றி மௌனமாக கடந்து செல்லும் இயல்புடையவராக இருப்பார். இதற்கான காரணங்களில் முதன்மையானது, குழந்தைப் பருவத்திலும், வளரும் பருவத்திலும், எதிலும் பெஸ்ட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் பதிக்கப்படுவது.