நார்த் சவுண்ட்டில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
எவின் லூயிஸ் 69 பந்துகளில், 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 94 ரன்களை விளாசித் தள்ள டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 35 ஓவர்களில் 157 ரன்கள் என்ற இலக்கை 26-வது ஓவரிலேயே கடந்து அபார வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
முன்னதாக, மேற்கு இந்தியத் தீவுகளின் பந்து வீச்சாளர் குடகேஷ் மோட்டி 4 விக்கெட்டுகளைச் சாய்க்க, 45.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து.
டாஸ் வென்ற மே.இ.தீவுகள் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தது. 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அனுபவமற்ற இங்கிலாந்தின் டாப் ஆர்டர் ஜெய்டன் சீல்ஸ் (2/22) இடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஃபில் சால்ட் (18), வில் ஜாக்ஸ் (19), அறிமுக பேட்டர் காக்ஸ் (17), ஜேக்கப் பெத்தெல் (27) தங்கள் ஆட்டத்தை நன்றாகத் தொடங்கி பில்ட் செய்யாம்ல் வீணடித்து ஆட்டமிழந்தனர்.
கேப்டன் லியாம் லிவிங்ஸ்டன் 48 ரன்களை எடுத்து கொஞ்சம் தெம்பு கொடுத்தார். சாம் கரன் (37) சேர்ந்து இருவரும் 72 ரன்களைச் சேர்த்தனர். ஸ்பின்னர் மோட்டியிடம் லிவிங்ஸ்டன் வெளியேறிய பிறகு 165 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து வீழ்ந்தது.
இலக்கை விரட்டும் போது இங்கிலாந்து பவுலிங்கிற்கு அதிர்ச்சியளித்தனர் எவின் லூயிஸும் பிராண்டன் கிங்கும் (30), 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினர். எவின் லூயிஸ் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது 11-வது அரைசதத்தை எடுத்தார். மழை வந்த காரணத்தால் ஆட்டம் நின்றது.
மழை நின்ற பிறகு மே.இ.தீவுகளுக்கு இலக்கு 35 ஓவர்களில் 157 என்று நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும் இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சரும் டர்னரும் அற்புதமாக பந்து வீசினர். எவின் லூயிஸ், பிராண்டன் கிங் மட்டையைத் தாண்டி பந்துகள் சென்றன. இருவரும் 118 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
எவின் லூயிஸ் 3 ஆண்டுகள் ஒருநாள் போட்டிகள் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை. பிறகு வந்தார் இலங்கைக்கு எதிராக 61 பந்துகளில் சதம் விளாசினார். நேற்று 69 பந்துகளில் 94 ரன்கள் விளாசி தன் கிளாஸ் வேறு ரகம் என்பதை நிரூபித்தார். இத்தனைக்கும் பிட்ச் நல்ல பேட்டிங் பிட்ச் என்று சொல்ல முடியாது. பந்துகள் மேல் எழும்பியும், தாழ்ந்தும் வந்த பிட்ச்.
நவம்பர் 2-ம் தேதி இரு அணிகளுக்கும் இடையே 2-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.