“உடம்புல சத்து குறைவா இருக்காம். அதனால டாக்டர் சத்து மாத்திரை சாப்பிடச் சொல்லியிருக்காரு…” என்பது போன்ற உரையாடல்களை அடிக்கடி கேட்டிருப்போம். பெரும்பாலும் வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகளைத்தான் அப்படிச் சொல்வார்கள். உடல்நலப் பிரச்னைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சத்து மாத்திரைகளையும் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.
உண்மையில் சத்து மாத்திரைகள் யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாச்சலம்…
வைட்டமின், மல்டி வைட்டமின் மாத்திரைகள் என்ன வேறுபாடு?
பி12, இ எனத் தனித்தனியாக வைட்டமின் சத்துகளுக்கு மாத்திரைகள் உள்ளன. மல்டிவைட்டமின் மாத்திரைகளில் பல வைட்டமின் வகைகள் சேர்ந்து இருக்கும். ஒருவருக்கு என்னென்ன குறைபாடுகள் உள்ளனவோ அதற்கேற்ப வைட்டமின் மாத்திரைகள் அல்லது மல்டிவைட்டமின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.
வைட்டமின் என்பது ஒரு வகை ஊட்டச்சத்து. உயிர் வாழ அத்தியாவசியமான உணவினைத் தவிர்த்து ஊட்டச்சத்தும் மிகவும் அவசியம். தற்போது உணவுப்பழக்கம் வெகுவாக மாறிவிட்டது. துரித உணவுகள், பிரியாணி போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள்.