அம்மாவே பயிற்சியாளர்… ஆனாலும் சாய் சுதர்ஷன் அதை உணர வருடங்கள் பல ஆனதாகச் சொல்கிறார் உஷா.
“பேண்டெமிக் வர்ற வரைக்கும் அவன் என்னை ஒரு டிரெய்னராவே மதிச்சதில்லை. ‘நானும் ரவுடிதான்’ மாதிரி, ‘டேய்… நானும் ஒரு டிரெய்னர்டா…’னு அடிக்கடி அவன்கிட்ட சொல்லிட்டே இருப்பேன். லாக்டௌன் டைம்ல வேற வழியில்லாம என்கிட்ட கத்துக்க வந்தான். ‘உனக்கு இவ்ளோ தெரியுமா…’னு ஆச்சர்யப்பட்டான். உடல்ரீதியான பயிற்சிகளைவிடவும் மனசளவுல அவன் ஸ்ட்ராங்கா இருக்கறதுக்கான பயிற்சிகளை நிறைய கொடுத்தேன்னுதான் சொல்லணும். இப்பவும் நான் டிரெய்னிங் கொடுத்தா, அம்மாதானேனு ‘ taken for granted’ மனநிலை அப்பப்போ எட்டிப்பார்க்கும்தான்… என்ன செய்ய….” உண்மைகளை உடைப்பவர், பிரபலத்தின் அம்மாவானதும் மகனை ரொம்பவே மிஸ் செய்கிறாராம்.
“என் பெரிய பையன் வெளிநாட்டுல படிச்சிட்டிருக்கான். சின்னவன் சாய் சுதர்ஷனும் கிரிக்கெட்ல பிசியானதால ரெண்டு பேரையும் பயங்கரமா மிஸ் பண்றேன். ரொம்ப தனிமையா உணர ஆரம்பிச்சேன். அதைப் பார்த்த சாய் சுதர்ஷன், ‘அம்மா… இனிமே நீயும் என்கூட மேட்ச்சுக்கு வந்துடு’னு சொன்னான். அதனால இப்பல்லாம் அவன்கூட டிராவல் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்…” அம்மாவாக மட்டுமன்றி, மென்ட்டாராக, ஃப்ரெண்டாகவும் துணை நிற்கிறார் உஷா.
“சாய் சுதர்ஷன் இத்தனை வருஷங்களா சோஷியல் மீடியாவுல அவ்ளோ ஆக்டிவ் கிடையாது. ஆனா இப்போ இருந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கு. சச்சின் மாதிரியான லெஜெண்ட்ஸ் எல்லாம் அவனை வாழ்த்தி ட்வீட் பண்றபோது பதில் சொல்லணும்னு இப்போ கொஞ்சம் ஆக்டிவ்வாக ஆரம்பிச்சிருக்கான். இப்போ எம்.ஏ ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறான். கிரிக்கெட்டுக்கு 60 சதவிகிதமும் படிப்புக்கு 40 சதவிகிதமும் கொடுத்தா போதும்னு சொல்லிட்டோம்.
இந்த உலகத்துல வாழத் தகுதியான அளவுக்குப் படிச்சா போதும்ங்கிறது எங்க எண்ணம். அதைத் தாண்டி அவனுக்கு படிப்பு தொடர்பா எந்த அழுத்தத்தையும் கொடுக்கிறதில்லை. கிரிக்கெட்டுல அவன் வளர்ந்துகிட்டிருக்கான். அவனை வளர்க்கறது மட்டுமில்லாம, அவனை மாதிரி இன்னும் நிறைய பேரை உருவாக்கணும். குறிப்பா பெண்களை… அதுதான் என் ஆசை, லட்சியம்….எல்லாம்…” தன்னலமில்லாத தாயுள்ளம் பிரதிபலிக்கிறது உஷாவிடம்.