புதுச்சேரி, திருபுவனையை அடுத்த சன்னியாசிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரின் மனைவி மயில் என்பவர் இறந்துவிட்டதால், இரண்டாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியின் மகள் கலிதீர்த்தாள்குப்பத்தில் இருக்கும் காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., படித்துவந்தார். நாகராஜின் முதல் மனைவி மயிலின் தம்பி மகன் முகேஷ் என்பவர் அந்த மாணவியை ஒருதலைப் பட்சமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடிந்ததும், வழக்கம்போல தனியார் பேருந்து மூலம் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.
பேருந்திலிருந்து அவர் சன்னியாசிகுப்பத்தில் இறங்கியதும் அங்கு நின்றிருந்த முகேஷ், அவரிடம் பேசுவதற்கு முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவரிடம் பேசுவதை தவிர்த்த மாணவி வீட்டை நோக்கி நடந்திருக்கிறார். அதில் ஆத்திரமடைந்த முகேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியிருக்கிறார். அதில் கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் பலமான வெட்டுக்காயங்கள் ஏற்பட, ரத்தவெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்திருக்கிறார் மாணவி. அவர் இனி உயிர் பிழைக்கமாட்டார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட முகேஷ், நிதானமாக அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.