சென்னை: எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் கூட்டம் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும் குறிப்பாக அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதிமுக அடிப்படை உறுப்பினர், பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்குவதற்கான சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்பட்டனர்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி; அதிமுகவை காக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஒற்றை தலைமை தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளோம். நீங்கள் விரும்பிய தீர்மானம் பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே கட்சி அதிமுக தான். எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அது கானல் நீராகதான் முடியும். அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள். அதிமுகவில் இணைந்து ஜெயலலிதாவின் எண்ண ஓட்டத்தை அறிந்து கட்சிப் பணியாற்றி பொறுப்புக்கு வந்தேன்.
அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர எனக்கு பொறுப்பு தந்துள்ளீர்கள். 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட பெருமை அதிமுகவுக்கு உண்டு. மக்கள் மனதில் என்றும் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். ஓ.பன்னீர்செல்வத்திடம் பல முறை சமாதானப் பேச்சசுவார்த்தை நடத்தினோம். ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு கோரினோம். அதிமுகவில் இரட்டை தலைமையால் கஷ்டப்பட்டோம். ஓபிஎஸ் ஒருபோதும் வீட்டுக் கொடுக்கவில்லை. விட்டுக்கொடுத்தேன் விட்டுக்கொடுத்தேன் என்று சொல்கிறீர்கள், எதை விட்டு கொடுத்தீர்கள், நீங்கள் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை, நாங்கள்தான் விட்டுக்கொடுத்தோம்.
ஜெயலலிதாவின் வெற்றிக்கு தடையாக இருந்த நீங்களா விசுவாசி?. நீங்கள் அம்மாவுக்கு விசுவாசமாக இல்லை; 48 ஆண்டு காலம் அதிமுகவிற்கு நான் விசுவாசமாக இருந்து செயல்பட்டுள்ளேன். இந்த கட்சியில் இருந்து கொண்டே கட்சியை அழிக்க நினைத்த எட்டப்பர்கள் வேண்டுமானால் கட்சியிலிருந்து வெளியேறலாம், தொண்டர்கள் இங்கேயேதான் இருப்பார்கள். ஓபிஎஸ் எப்போதும் சுயநலமாக செயல்படுபவர். தனக்கு கிடைக்காதது எவருக்கும் கிடைக்க கூடாது என நினைப்பவர் இவ்வாறு கூறினார்.