எந்த கேப்டனின் வழியையும் பின்பற்ற மாட்டேன் என்று கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் நிதிஷ் ராணா அதிரடியாக கூறியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். அவர் குணம் அடைந்து அணிக்கு திரும்புவாரா அல்லது தொடரை தவிர்ப்பாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அணிக்கு தற்காலிக கேப்டனாக நிதிஷ் ராணாவை நிர்வாகம் நியமித்துள்ளது. இடது கை பேட்ஸ்மேனாக இருக்கும் நிதிஷ் ராணா கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியில் விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக அவர் இதே அணியில் 5 சீசன்களில் விளையாடியிருக்கிறார். 29 வயதாகும் அவரை கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்துள்ளது.
கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ராணா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- ஒவ்வொரு நாளின் முடிவிலும் நாம் எப்படி மனிதர்களை சரியாக பயன்படுத்தியுள்ளோம் என்பது மிகவும் முக்கியமானது. மற்ற அணிகளை வழிநடத்திய அனுபவம் எனக்கு உள்ளது. இதனால் என்னால் கொல்கத்தா அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைக்கிறேன். நான் எந்த கேப்டன்களையும் ரோல் மாடலாகக் கொண்டு செயல்பட விரும்பவில்லை. எனது வழியில் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணிக்காக 3 சர்வதேச டி20 போட்டிகளில் நிதிஷ் ராணா விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆலன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது சிகிச்சை மேற்கொண்டு வரும் ஷ்ரேயாஸின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.