எங்கள் மன இணைவைக் காப்பாற்றி வரும் ரகசியம் – இல்லத்தரசியின் இனிய போராட்டம் 7 | My Vikatan

Share

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

உணவு சார்ந்த கவனங்களுக்கு இணையாக உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவமும் சொல்லி இருந்தார்கள். காலையில் அதற்கான நேரம் ஒதுக்குவது கஷ்டமாக இருந்தது. காலை நடைப்பயிற்சி எப்பவும் அலுவலகம் கிளம்பு முன் செய்ய வேண்டிய பணிகளையே நினைவூட்டி டென்ஷன் தந்தது. பழங்கால வாழ்வு முறையில் வீட்டைச் சுற்றி சுத்தம் செய்தல் தெளித்துக் கோலம் இடுதல் போன்ற அதிகாலைப் பயிற்சிகளும் இருந்தனவே. உணவு முறை மாற்றங்கள் வேறு ஆரம்பித் திருந்ததால் பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டி இருக்கும் அல்லவா… அலுவலகம் விட்டு வந்ததும் இரவுக்கான லைட் உணவு ஏற்பாட்டைச் செய்து விட்டு இருவரும் போக வர நாலு கிலோ மீட்டர் இலக்கு உள்ள ஒரு இடம் வரை சென்று வர ஆரம்பித்தோம். அதோடு மெதுவாக அவரது நீரிழிவினால் எனக்கு சில நன்மைகளும் வர ஆரம்பித்தன. வியப்படையாமல் மேலே வாசியுங்கள்.

Representational Image

இருவரும் ஒரே துறையில் பணி புரிந்ததால் அன்றின் அனுபவங்கள் பற்றி ஏதாவது பேசிக் கொண்டே செல்வோம். அப்புறம் அந்த நாலு கிலோ மீட்டர் நடையில் எங்கள் அன்றாடப் பிரச்சினைகள் சின்னச் சின்னச் சண்டைகள் எல்லாம் குழந்தைகள் அறியாமலேயே முடிந்து விடும்.

ரோடு என்பதால் அடக்கியே வாசிப்போம். போகும் போது பிரச்சினை பற்றி ஆரம்பித்தால் வரும் போது பேசித் தீர்த்து அன்றே மறந்து விடுவோம். கிட்டத்தட்ட முப்பத்தி ஏழு ஆண்டுகளாக இந்த நடை உண்மையில் எங்கள் மன இணைவைக் காப்பாற்றி வருகிறது .

இப்பவும் சில கடைக்காரர்கள் பல வருடங்களாக நாங்கள் வருவதைப் பார்த்து கடிகாரம் இன்றி நேரம் தெரிந்து கொள்வோம் என்று சொல்கிறார்கள். ஊர் மாறினாலும் இந்த நடைப்பயிற்சி ஒரு நீண்ட மன உறவின் அடையாளமாக முதிர்ந்து மென்மையாகத் தொடர்கின்றது. எங்கள் காதல் கோபம் கருணை துன்பம் சஞ்சலம் வெற்றி தோல்வி இன்பம் கண்ணீர் எல்லாவற்றுக்கும் இன்று முதிய வயதில் கை பிடித்துச் செல்லும் இந்த நடையே நாங்கள் இருவர் மட்டும் உணர்கிற சாட்சியாகி விட்டது.

Representational Image

கொஞ்சம் கொஞ்சமாக இந்த சேர்ந்து நடக்கும் நடைப் பயிற்சி மார்க்கெட் கோவில் என்று எங்கு சென்றாலும் முடிந்த வரை சேர்ந்தே செல்லும் பழக்கத்தைத் தானே கொண்டு வந்தது. அவரது நீரிழிவுக்காக நான் எடுத்த முயற்சிகள் படிப்படியாக வீட்டிலும் எல்லா வேலைகளையும் இணைந்து செய்யும் எண்ணத்தையும் அவருக்கும் தந்தது. குவாலிட்டி டைம் என்று சொல்வார்களே அந்த குவாலிட்டி டைமை வீட்டுக்குள் முயற்சித்தால் முதலில் வீட்டு மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் நட்புடன் இருப்பார்கள்.. வீட்டு மனிதர்களின் நண்பர்களோ வீட்டுக்கே பொதுவான நண்பர்களாக ஆகி விடுவார்கள். எங்கள் இருவரின் நண்பர்களும் எங்கள் பிள்ளைகளின் நண்பர்களும் அன்று பெரும்பாலும் எங்கள் குடும்ப நண்பர்களே…

இருவரும் வேலைக்குச் சென்றதால் அன்று வீட்டில் உணவு உண்ணும் நேரம் எப்போதும் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தது. இப்ப மகன் வீட்டிலும் முடிந்தவரை இப்படியே தொடர்கிறது. காலை காஃபியும் ஒருவர் தூங்கி விட்டால் மற்றவர் முடிந்த வரை காத்திருப்பது அல்லது பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக அவருடன் மீண்டும் அருந்துவது என்று முடிந்தவரை ஆகி விட்டது.

அடுத்து இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்த தும் சும்மா தெரிந்த செய்முறைகளில் கலவைக் காய்கறிகள் பருப்பு வகை என்று நின்று விடாமல் வேறு மாநில ( சைவ உணவே பழக்கம்) சமையல் முறைகளைக் கற்றுக் கொண்டு கையாள்வது கொஞ்சம் கொஞ்சமாகப் பழகியது. புத்தகங்களைத் தோழமையாகக் கொண்டவர்களை எப்போதும் அவையும் வேண்டியதை வேண்டியவாறு தந்து அரவணைத்துக் கொள்ளும். ஆயுசு பூரா கரம் பற்றி வரும்… எனக்கும் வருகின்றது… எனவே விரும்பினதைக் கற்றுக் கொள்தல் ஓரளவு சாத்தியமானது..

Representational Image

அப்படித்தான் பல்வேறு மாநிலங்களின் சைவ உணவு வகைகளைப் பற்றி அறிந்து வீட்டின் சுவைக் கேற்றவாறு செய்ய ஆரம்பித்தேன். தேவையான மசாலாக்களை செய்முறை கற்று அவ்வப்போது வீட்டிலேயே செய்து கொண்டேன். சமைப்பதில் ஆர்வம் கொஞ்சம் உண்டு என்பதால் ஒரே ரெசிபியை பலரும் பலவிதமாக எப்படிச் செய்கிறார்கள் என்று பார்த்து அவற்றில் இருந்து எனக்குச் சரியாகத் தோன்றும் ஒன்றை அமைத்துக் கொண்டு அதை அப்போதே அளவுகளுடன் எழுதி வைத்துக் கொள்கிறேன்.

Representational Image

சரி..கொஞ்சம் நம் உணவு பற்றிப் பார்ப்போம்.

பனீர் சார்ந்த உணவுகள் புரதச் சத்தும் சுவையும் கொண்டது அல்லவா..பனீர் செய்வது மிகவும் எளிது. நிறையப் படித்தும் வீடியோக்களில் பார்த்தும் இருப்பீர்கள். வீட்டில் செய்வதில் அனுகூலம் நிறைய. நம் வயிற்றுக்குப் பழகிய ஃப்ரெஷ் ஆன பாலில் அவ்வப்போது புதிதாகச் செய்து கொள்ளலாமே. பொங்கும் பாலில் தேவையான அளவு எலுமிச்சைச் சாறு அல்லது கடைந்த புளிப்புத் தயிர் அல்லது தரமான வினிகர் கலந்தால் திரிந்து விட்டுப் போகிறது.

வடித்த பனீர் மீது வெயிட் வைத்து வெயிட் பண்ணினால் துண்டு போட ரெடி. அந்த வே வாட்டர் எனப் படும் வடித்த நீரின் நன்மை பற்றிப் பலரும் சொல்கிறார்கள். ஆனால் அடிக்கடி பனீர் செய்கையில் கிடைக்கும் நீரை முழுதும் பயன்படுத்துதல் கடினமே. தெரிந்தவர்கள் பகிர்ந்தாலும் பயன் பெறுவேன். தெரியாதவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எப்பொழுதும் பனீரை இப்படித் துண்டுகள் போட வேண்டிய கட்டாயம் இல்லை. திரிந்த பாலை நன்கு வடித்து சற்று உதிர்த்து விடுங்கள்.

Representational Image

கிரீம் சேர்ந்த மலாய் பனீர் சுவையும் மென்மையும் அதிகமாக இருக்கும். பதிலாக வீட்டில் ஃபுல் கிரீம் பால் வாங்கி நன்கு காய்ச்சி ஆறவைத்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து கெட்டியாகக் சேரும் கொழுப்புச் சத்து நிறைந்த பால் ஏட்டினை அகற்றிச் சேகரித்து வீட்டுத் தேவைக்கு வெண்ணெய் எடுத்து விடலாம். மீதப் பாலில் பனீர் செய்து கொள்ளுங்கள். மலாய் பனீர் அளவு மென்மை இருக்காதெனினும் சத்து நிறைந்து கிடக்குமே….உங்களுக்குத் தேவை எனில் தேவைப் படும் அளவு க்ரீம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்படிச் செய்யும் பனீரை உதிர்த்து அல்லது துருவி நீங்கள் செய்யும் உணவு வகைகளில் சேர்த்தால் கடினத் தன்மை தெரியாது.

கொஞ்சம் இதில் எளிமையாகச் செய்யக் கூடிய ஓரிரு உணவு வகைகளையும் பார்ப்போமா..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com