கிருஷ்ணகிரி: ஓ.பன்னீர்செல்வம் சுய சிந்தனை இல்லாதவர் என வேப்பனஹள்ளி எம்எல்ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.பி.முனுசாமி எம்எல்ஏ அளித்த பேட்டி:
ஓ.பன்னீர்செல்வம், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எங்களை அழைத்திருக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம் கடந்த 23ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு இருவரும் கையெழுத்திட்டு, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பினர். பொதுக்குழுவுக்கு முன்பாக மாவட்ட செயலாளர்கள், தலைமை செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதித்துக் கொள்ளலாம் என்ற நிலையில், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு, கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினார். நீதிமன்றத்திற்கு சென்றார்.
மூன்றாவது மனிதரை போலவும், கட்சி நிர்வாகிகளை எதிரிகளை போலவும் பாவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றமே, நீங்கள் பொதுக்குழுவிற்கு செல்ல வேண்டும் என உத்தரவிடுகிறது. ஆனால், அங்கு வரவில்லை. அதனால்தான் சொல்கிறேன். அவர் எங்களை அழைப்பதற்கு தார்மீக உரிமையை இழக்கிறார். இப்போது மேல்முறையீடு செய்திருக்கிறோம். அதில் என்ன விதமான தீர்ப்பு வருகிறதோ, அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓ.பன்னீர்செல்வம், ஒருவர் பின்னாலே இருந்து வந்தவர். அவர் சொல்வதை கேட்டு கேட்டு செயல்பட்டவர். சுய சிந்தனை இல்லாதவர். அந்த சுய சிந்தனை இல்லாதவர் இப்படித்தான் பேசுவார். அதிமுகவில் உள்ள ஒரு தலைவர் நாட்டின் பிரதமர் சொன்னார் என்பதற்காகத்தான் நான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னால், அவர் எவ்வளவு சந்தர்ப்பவாதியாக இருக்க வேண்டும். அவருக்கு சுயமாக சிந்திக்கத் தெரிகிறதோ இல்லையோ, சுய நலக்காரராக இருக்கிறார். இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.