சட்டப்பேரவையில் சத்தமே காட்டாமல் ஆளுங்கட்சி சொல்லும் அனைத்துக்கும் தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என்ற பேச்சு பரவலாக எழுந்திருக்கிறது. ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் பெரியளவில் போராட்டங்கள் நடக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. இவற்றோடு, காங்கிரஸ் கட்சித் தலைமைக்கான போட்டி, கே.எஸ்.அழகிரி உடனான மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்….
“ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைக்குத் தமிழ்நாட்டில் பெரியளவில் எந்தப் போராட்டமும் நடக்கவில்லையே ஏன்?”
“ராகுலைச் சாய்த்து விட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என பா.ஜ.க நினைக்கிறது. அதற்காகத்தான் ராகுல் காந்தியை அடக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. அதன் ஒரு பகுதியின் அவரது பதவி பறிப்பு உள்ளிட்ட எல்லாம். இந்தியா முழுவதும் பெரியளவில் போராட்டங்கள் நடந்தன.
தமிழ்நாட்டில் எனது தலைமையில் போராட்டங்களை நடத்தினேன். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியோ அவரது தலைமையிலோ பெரியளவில் போராட்டம் நடத்தப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கும் இருக்கிறது. மோடிமீது மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு மனநிலையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை இயக்கமாக மாற்றவில்லை என்பது எனக்கும் வருத்தம்தான்.”