தங்கள் ஊரில் உள்ள நற்பணி கழகத்தினர் 3 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக ஒரு சிறுமி, கலெக்டரிடம் புகார் அளித்தது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது
நாகை ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் தேவநதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வா்கிஸ் நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தார். அப்போது பெருங்கடம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கலெக்டருக்கு சால்வை அணிவித்து, தான் கொண்டு வந்த மனுவையும் கொடுத்தார்.
பின்னர் அவர் கலெக்டரிடம், `எங்க ஊர்ல நற்பணி கழகம் வைச்சிருக்கிறவங்க, எங்களை ஊரைவிட்டு விலக்கி வெச்சிருக்காங்க. ஊர்ல இருக்கிறவங்க யார் சாவுக்கும் எங்களை விடமாட்டேங்கிறாங்க. எங்க வீட்டு சாவுக்கும் ஊருல இருந்து யாரும் போகக் கூடாதுனு சொல்லியிருக்காங்க.
எங்க மாமா இடி விழுந்து இறந்தப்போ, அவங்களை ஊர்ல இருக்கிறவங்க யாரும் தூக்கக்கூடாதுனு கட்டளை போட்டாங்க. `அவங்க வீட்டுக்கு சாவுக்கு யாராவது மீறி போனா அடிப்போம்’னு சொல்லி எல்லாரையும் மிரட்டுறாங்க. அத நீங்கதான் சரி பண்ணணும் கலெக்டர் அய்யா’ என்று மழலைக் குரலில் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து கலெக்டர், நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பின்னர் மாணவியிடம், `உங்க பேரு என்ன, எந்த ஸ்கூல்ல படிக்கிறீங்க, என்ன வகுப்புப் படிக்கிறீங்க, இப்ப ஸ்கூல் லீவா’ என்று கனிவோடு விசாரித்தார் கலெக்டர். 5-ம் வகுப்பு மாணவி தங்கள் கிராம பிரச்னை குறித்து மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.
நாகை மாவட்டம் பெருங்கடம்பனூரில் உள்ள நற்பணி கழகத்தினர், சோமசுந்தரம் என்பவர் உட்பட 3 குடும்பங்களை மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இப்போது மாவட்ட கலெக்டரின் நடவடிக்கைக்காக பெருங்கடம்பனூர் கிராம மக்கள் காத்துள்ளனர்.