உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டிலுள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வரும் பெண்களில் ஹெச்.ஐ.வி எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 16 மாதங்களில் இந்த மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வந்த 60 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 2022-23-ம் ஆண்டில் இந்த மருத்துவமனைக்கு வந்த 33 கர்ப்பிணிப் பெண்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டில் ஜூலை வரை மேலும் 13 கர்ப்பிணிப் பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர, முன்னதாக இதே மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்தவர்களில் 35 கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஏற்கெனவே எய்ட்ஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் உறுதிசெய்யப்பட்ட பெண்களுக்கு அரசு தேவையான மருந்துகளைக் கொடுத்து வருகிறது. இது குறித்து மீரட் மருத்துவமனை அதிகாரி அகிலேஷ் மோகன், “மீரட் லாலா ரஜபத் ராய் மருத்துவமனையில் 60 கர்ப்பிணிப் பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
அவர்கள் அனைவருக்கும் பிரசவம் நடந்திருக்கிறது. தாயும், சேயும் நலமாக இருக்கின்றனர். எவ்வாறு அவர்களுக்கு எய்ட்ஸ் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வுசெய்ய கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
ஒரே மருத்துவமனையில் இந்த அளவுக்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு எய்ட்ஸ் நோய் அதிகமாக இருப்பது சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. பொதுவாக பாலியல் உறவு, ரத்தப் பரிமாற்றம், ஊசி மூலம் எய்ட்ஸ் நோய் பரவுகிறது. தாயிடமிருந்து பிரசவத்தின்போதும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவுகிறது.