
ஆண்டுதோறும் உலக தைராய்டு தினம் மே 25-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடம்பில் 15 முதல் 20 மைக்ரோ கிராம் அயோடின் இயற்கையாகவே இருக்கும். அதில் 70 முதல் 80 சதவிகிதம் தைராய்டு சுரப்பியில் காணப்படும்.

ஒரு மனிதனின் அன்றாடச் செயல்பாட்டுக்கு 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவை என்பதால் உடலுக்குத் தேவையான அயோடினை உணவு மூலம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடலில் அயோடினின் அளவு அதிகமானாலும் குறைந்தாலும் தைராய்டு சுரப்பியில் பிரச்னை ஏற்படும். உடலில் அளவுக்கதிகமாக தைராய்டு சுரந்தால் ஹைப்பர்தைராய்டிஸம் (hyperthyroidism) என்றும், மிகக்குறைவாகச் சுரந்தால் ஹைப்போதைராய்டிஸம் (hypothyroidism) என கூறப்படும்.

ஒருவரின் உடலில் அயோடினின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை அயோடின் பேட்ச் பரிசோதனை (Iodine Patch Test), ரத்தப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும்.

தைராய்டுக்கான முக்கிய அறிகுறிகள் உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, தசை மற்றும் மூட்டு வலிகள், ஒழுங்கற்ற மாதவிடாய், தூக்கமின்மை.

இந்தக் குறைபாட்டால் ஆண்களைக் காட்டிலும், பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அறிகுறிகள் தென்பட்டால் பெண்கள், தைராய்டு சுரப்பிக்கான பரிசோதனை (TSH – Thyroid stimulating hormone), மார்பகத்துக்கான ‘எக்ஸ் ரே’, டி-4 (thyroxin test) பரிசோதனை செய்ய வேண்டும்.

ஹைப்போதைராய்டு பிரச்னை உள்ளவர்கள் அயோடின், நார்ச்சத்து மிகுந்த உணவுகளையும், வைட்டமின் `பி’ சத்துள்ள ஓட்ஸ், பார்லி, பழுப்பு அரிசியும், ஒமேகா 3 அதிகமுள்ள மீன்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முட்டைகோஸ் காலிஃபிளவர், நூல்கோல், முளைகட்டிய பயறு வகைகள், பொரித்த உணவுகள், இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சாக்லேட் போன்ற இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.

ஹைப்பர்தைராய்டினால் பாதிக்கப்பட்டவர்கள் அயோடின் குறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், உப்பில்லா நட்ஸ், பருப்பு வகைகள், ஓட்ஸ், உருளைக்கிழங்கு, தேன், முட்டையின் வெள்ளைக்கரு உண்ண வேண்டும்.

இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் டி அடங்கிய ஆளி விதை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், மிளகு, பச்சைமிளகாய், மஞ்சள் போன்ற உணவுப்பொருள்களை சேர்த்துக்கொள்ளலாம்.