உலக கேரம் போட்டி: தமிழக வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை | Kasima won World champion in Carrom

Share

சென்னை: அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை காசிமா (17), 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். மகளிர் தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என 3 பிரிவுகளிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்து வரும் ஆறாவது உலக கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கோலகலமாக நடைபெற்றது. அதில் பல்வேறு நாடுகளைச் சேந்த வீரர்கள், வீராங்களைகள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்தச் சாம்பியன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த காசிமா (17) பங்கேற்றிருந்தார்.

மகளிர் தனிநபர், இரட்டையர், குழு என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று சாம்பியன் ஆனார். இவர் சென்னை புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஆவார். அமெரிக்காவில் நடந்த போட்டியில் தமிழக வீராங்கனைகள் காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகியோர் பங்கேற்றனர்.

வரும் 21-ம் தேதி அமெரிக்காவில் இருந்து பதக்கத்தோடு வீராங்கனை காசிமா நாடு திரும்ப உள்ளார். காசிமாவின் தந்தை ஊடகப் பேட்டியில், “வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் இது. ஒட்டுமொத்த இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. எனது மகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எளிய பின்புலம் கொண்ட காசிமாவின் வெற்றியை, தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இவருக்கு கடந்த ஜூலை மாதம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1.50 லட்சம் ரூபாய் பண உதவி செய்தது நினைவுக்கூரத்தக்கது.

முதல்வர் பாராட்டு: உலக காரம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள வீராங்கனை காசிமாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது #CarromWorldCup-இல் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்! பெருமை கொள்கிறேன் மகளே… எளியோரின் வெற்றியில்தான் #DravidianModel-இன் வெற்றி அடங்கியிருக்கிறது!” என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com