தலைசிறந்த போட்டியாளர்கள் ஆடும் அந்த கேண்டிடேட்ஸ் தொடரை வெல்பவர்தான் உலக சாம்பியன் போட்டியில் ஆட முடியும். அதனால்தான் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதிபெறுவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
திவ்யா தேஷ்முக்குக்கு வயது 19 தான். உலகத் தரவரிசையில் 18 வது இடத்தில் இருக்கிறார். இந்த உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனையான தான் ஷாங்யிக்கு எதிராக திவ்யா மோதியிருந்தார். சீன வீராங்கனை அனுபவமிக்கவர். அவருக்கு எதிராக திவ்யா கொஞ்சம் பலவீனமான போட்டியாளராகத்தான் பார்க்கப்பட்டார். ஆனால், சிறப்பாக ஆடி இந்தப் போட்டியை வென்றார்.

அரையிறுதிப் போட்டியில் இரண்டு சுற்றுகள் நடக்கும். இரண்டு சுற்றுகளும் டிரா ஆகும்பட்சத்தில் டை – பிரேக்கர் நடக்கும். இதில் முதல் சுற்றுப் போட்டி டிரா ஆன நிலையில், இரண்டாவது சுற்றை திவ்யா வென்றிருந்தார். இதனால் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றிருந்தார்.
இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டதால் கேண்டிடேட்ஸ் தொடருக்கும் திவ்யா தகுதிப்பெற்றுவிட்டார். ‘என்னால் இன்னும் இந்த வெற்றியை உணர முடியவில்லை…’ என உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக் கண்ணீரோடு திவ்யா பேசியிருந்தார்.