காதலர் தினம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இவர் 2018-ம் ஆண்டு நான்காம் நிலை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கை நம்மைப் பந்தாடிவிடுகிறது. எனக்கு கேன்சர் உச்சக்கட்டத்தில் இருப்பது உறுதியாகிவிட்டது. வலிக்காக மேற்கொண்ட பரிசோதனையில் எதிர்பாராத விதமாக கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டது. என்னைச் சுற்றிலும் எனக்கு உதவி செய்வதற்காக, குடும்பத்தாரும் நண்பர்களும் சூழ்ந்து நிற்கிறார்கள். நான் ஆசீர்வதிக்கப்பட்டவள்” எனப் பதிவிட்டு இருந்தார்.

அதன் பிறகு, மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சைக்காக நியூயார்க் சென்றார். பலகட்ட போராட்டத்துக்குப் பிறகு, சிகிச்சைகள் முடிந்து திரும்பினார் சோனாலி.
இந்நிலையில், தற்போது நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசியவர், “மருத்துவர்கள் நான் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் 30 சதவிகிதம் மட்டுமே உள்ளதாகத் தெரிவித்தனர். என்னுடைய சமூக வலைதளப் பதிவால் கேன்சர் குறித்த சோதனை எண்ணிக்கை அதிகரித்தது. பலர் தங்களைப் பரிசோதித்துக்கொண்டனர்.

இன்றைக்கு அனைவரும் கேன்சர் குறித்து சாதாரணமாகப் பேசுகிறார்கள்; நான்கு வருடங்களுக்கு முன்பு இப்படி இல்லை. இன்று நான் அதை ஏற்றுக்கொள்கிறேன், அந்த உரையாடலை என்னால் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஏற்பட்ட நோய் குறித்து அச்சப்படாமல், அதிலிருந்து மீண்டதோடு, பிறருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சோனாலி நிச்சயமாக ஆசீர்வதிக்கப்பட்டவரே!