இங்கிலாந்தில் முதன்முறையாக 43 வயதுடைய ஒருவர், ஜாம்பி மருந்தால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதான கார்ல் வார்பர்டன். இவர், மே 2022 அன்று தன்னுடைய வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவர் இறப்புக்கான காரணம், சட்ட விரோத மருந்துகளைப் பயன்படுத்தியது எனத் தெரியவந்தது. அவருடைய உடலைப் பரிசோதனை செய்ததில், ஹெராயின், ஃபெண்டானில் மற்றும் கோகோயின், அத்துடன் ஸைலாஸைன் (xylazine) போன்றவை கலந்திருப்பது தெரிய வந்தது.
சாதாரணமாக ஸைலாஸைன் மருந்து, பெரிய விலங்கினங்களுக்கு மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்களுக்கு இம்மருந்து பயன்படுத்தப்படுவதில்லை. இம்மருந்தை ஒருவர் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில், இதயத் துடிப்பைக் குறைத்து, அல்சர் போன்ற பெரிய காயங்களை ஏற்படுத்தும். சருமத்தையே தின்றுவிடும்.
இறந்தவரின் இறப்புச் சான்றிதழில், `இவர் ஹெராயின் வாங்கி இருக்கலாம்; ஆனால், அதில் ஸைலாஸைன் மற்றும் ஃபெண்டானில் கலந்திருப்பது தெரிய வாய்ப்பில்லை’ என்று தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 2000-களின் தொடக்கத்தில் இந்த மருந்து சட்டவிரோதமாகச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. அமெரிக்க அரசு இதனை, வளர்ந்து வரும் ஆபத்து எனக் குறிப்பிட்டு அந்த மருந்துக்குத் தடை விதித்தது.
இந்நிலையில் இங்கிலாந்தில் முதன்முறையாக ஸைலாஸைன் தொடர்புடைய முதல் மரணம் பதிவாகியுள்ளது. இது இங்கிலாந்து மருந்து விநியோகத்தில் ஸைலாஸைன் நுழைவதைக் குறிக்கிறது என்று பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.