
மாரடைப்பை போலவே திடீரென்று உயிரைப் பறிக்கும் மற்றொரு பாதிப்பு… கோடைக்காலத்தில் ஏற்படும் ‘சன் ஸ்ட்ரோக்’ (Sun Stroke). ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) என்றும் சொல்லலாம்.

பேசிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் மயங்கிவிழுவது கோடைக்காலத்தில் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்று. கோடை வெப்பம் தாங்காமல் பலர் உயிரிழக்கவும் செய்வார்கள்.

அதிக வெப்பத்தின் காரணமாக, நம் உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்து போவதுதான் ‘ஹீட் ஸ்ட்ரோக்.’ நம் உடலின் உள் வெப்பநிலையும், பிஹெச்-ம் (pH) எப்போதும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான், ரத்தத்திலுள்ள ரசாயனங்கள் அனைத்தும் சரியாக வேலைசெய்யும், ரத்தம் உறையாமலிருக்கும்.

நம் உடலில் ரத்த சுழற்சிக்கு வெப்பம் மிக அவசியம். ரத்தத்தின் வெப்பம் குறைந்து, குளிர்ந்தநிலைக்குச் சென்றுவிட்டால் ரத்தம் அப்படியே உறைந்துவிடும்.

நம் உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் தெர்மோஸ்டாட் (Thermostat) இருக்கிறது.

நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது. இந்த தெர்மாஸ்டாட் செயலிழக்கும் நிலைக்கு ‘ஹீட் ஸ்ட்ரோக்’ என்று பெயர்.

ஹீட் ஸ்ட்ரோக்கில் இரண்டு வகை உள்ளன. எந்தச் செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படுவது Non Exertional Heat Stroke.

வெறுமனே, உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே உண்டாகும் Non Exertional Heat Stroke வயதானவர்களுக்குத்தான் ஏற்படும்.

வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படுவது Exertional heat stroke. இள வயதுக்காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இது உண்டாகும்.

இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிக வெப்பமான இடங்களில் இருக்கக் கூடாது. சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவைவிட 500 மி.லி அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெப்பத்தை உட்கிரகிக்கும் உடைகளை அணியக் கூடாது. உடலுக்குக் குளிர்ச்சி தரும், நீர்சத்துகள் நிறைந்த பழ வகைகளைச் சாப்பிடவேண்டும்.

ஹீட் ஸ்ட்ரோக்கால் ஒருவர் பாதிக்கப்படும் பட்சத்தில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஐஸ் க்யூபை அக்குளில், கழுத்தில், தொடைக்கிடையில் வைக்க வேண்டும்.

ஈரத்துணியை நன்றாகப் பிழிந்து உடலின் மீது போர்த்த வேண்டும். இதனால், உடலின் வெப்பநிலை குறைய வாய்ப்புண்டு. இதை ஒரு முதலுதவியாக மட்டுமே செய்ய வேண்டும்.