இந்திய மருந்துச் சந்தையில் கிடைக்கும் இருமல் டானிக்குகளில் பெரும்பாலானவை, பல மருந்துகள் அடங்கிய கூட்டுக் கலவை. இந்தக் கலவையான டானிக்குகளில் 2% மட்டுமே மெய்யான மருத்துவத் தேவைகளுக்குப் பரிந்துரைக்க உகந்த கலவைகள். மற்றவை, ஒரே குழுவைச் சேர்ந்த இரு மருந்துகளைக் கொண்டோ, நேரதிர் வேலைகளைச் செய்யும் இரு மருந்துகளை ஒன்றிணைத்தோ உருவாக்கப்பட்டுள்ள டானிக்குகள் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு இருமல் ஏற்படும் போது கட்டாயம் குழந்தைகள் நல மருத்துவரிடமோ, பொதுநல மருத்துவரிடமோ நேரில் ஆலோசனை பெற்று, அவர் நாடிமானி கொண்டு நுரையீரலைப் பரிசோதனை செய்த பின் பரிந்துரைக்கும் டானிக்குகளைக் கொடுப்பதே சரியான பழக்கம். ஆனால் மருத்துவர்களிடம் காத்திருக்க வேண்டுமே என்று கருதியும், மருத்துவர் கட்டணத்தை மிச்சப்படுத்தும் நோக்கிலும், பெற்றோர்கள் நேரடியாக மருந்தகங்களில் இருமல் டானிக்குகள் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போக்கு இருப்பதைக் காண முடிகிறது. இது ஆபத்தான பழக்கம்.
ஒரு குழந்தைக்கு சளி, இருமல் பிரச்னை ஏற்பட்டு, மருத்துவரை சந்திக்கும் போது, அவர் அந்த இருமலின் காரணத்தை முதலில் கண்டறிவார். அது வறட்டு இருமலா, அல்லது சளி வரும் இருமலா, கிருமித் தொற்றால் இருமல் ஏற்பட்டுள்ளதா, அல்லது ஒவ்வாமை காரணமா என்பதையும் அறிந்துகொள்வார். வறட்டு இருமலுக்கு ஒருவித மருந்து, அதுவே இளைப்பு என்றால் ஒருவித மருந்து. கிருமித் தொற்று இருந்தால் இன்னொருவித மருந்து, இருமலின்போது சளி வெளிப்பட்டால் அதை வெளிக்கொணரும் மருந்து என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான மருந்து வழங்கப்பட வேண்டும்.
ஆஸ்துமா, அலர்ஜி இருக்கும் குழந்தைகளுக்கு சுவாசப்பாதையை விரிவடையச் செய்யும் மருந்துகள் தேவைப்படும். இன்னும் தீவிரமான சுவாசப்பிரச்னை இருப்பின் ஸ்டீராய்டு டானிக்குகள் கூடவே மருந்தை நெபுலைசேஷன் செய்ய வேண்டும்.
தீவிரமான சளித்தொற்றாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய சூழலும் கூட இருக்கலாம். எனவே, குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் என்றால் மருத்துவரை விரைவாக சந்திப்பதே சிறந்தது. காலத்தைக் கடத்தி விட்டு மருத்துவரை நாடுவது பிரச்னையை வளரவிட்டு ஆபத்தில் முடியக்கூடும்.