சென்னையில் பணியாற்றிய அரசு மருத்துவர்களான டாக்டர் மருது பாண்டியன் மற்றும் டாக்டர் சோலைசாமி ஆகிய இருவரும் 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தது மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரது இறப்புக்கும் அதீத பணிச்சுமை காரணம், 24 மணி நேரம் தொடர் பணியில் இருந்தனர் என்று பலரும் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவர் மருது பாண்டியன் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்ட ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணிராஜன், `மருத்துவர் மருதுபாண்டியன் சென்னை மருத்துவக் கல்லூரியில் பொது அறுவைசிகிச்சைத் துறையில் பட்ட மேற்படிப்பு படித்தார்.
பின்னர், சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே பொது அறுவையியல் துறையில் உதவி அறுவைசிகிச்சை பேராசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து இரைப்பை – குடல் அறுவைசிகிச்சை துறையில் உயர் சிறப்பு மருத்துவ படிப்பில் (எம்சிஹெச்) சேர்ந்தார். துறைக்குப் புதிய மாணவரானதால், துறையின் வழக்கப்படி துறை சார்ந்த பணிகள் பற்றி அறிமுகம் ஆவதற்காக மருத்துவர் மருதுபாண்டியன் ஒரு பார்வையாளராகத்தான் நடத்தப்பட்டு வந்தார். அவரது அகால மரணம் சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினரைத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
முறையான பரிசோதனைகள் முடிந்த பின்னர்தான் அவரது இறப்புக்கான முழுமையான காரணம் தெரியும். பணிச்சுமையால் அவர் இறந்துவிட்டார் என்ற கருத்தும், தொடர்ந்து 36 மணிநேரம் பணியில் இருந்தார் என்பதும் முற்றிலும் தவறானது’ என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், “தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அரசு மருத்துவர்கள் 24 மணி நேரம் பணியமர்த்தப்படுகிறார்கள்.
இது அவர்களை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கிறது. இதனால் பல மருத்துவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சில மருத்துவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகி இளம் வயதிலேயே மாரடைப்பில் இறக்கும் அவலநிலையும், சில பேர் தற்கொலை செய்து கொள்வதும் நடைபெறுகிறது. அரசு மருத்துவர்களுக்கு வழங்கும் 24 மணி நேர பணியை 8 மணி நேரமாகக் குறைக்க வேண்டும்.
இதைத் தவிர பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களும் 24 முதல் 36 மணி நேரம் வரை பணி செய்கின்றனர். இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதில் பயிற்சி மருத்துவர்களையும், பட்ட மேற்படிப்பு மாணவர்களையும் 8 மணி நேரம் மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நிபந்தனையிட்டது. இருப்பினும் இதை மீறி பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 8 மணி நேரத்துக்கும் மேல் பணியமர்த்துகின்றனர்.
இதில் தமிழக அரசு முறையாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப போதுமான செவிலியர்கள் இல்லை. செவிலியர்களின் வேலையையும் சேர்த்து பயிற்சி மருத்துவர்களும், பட்டமேற்படிப்பு மாணவர்களும் செய்வதால் அது அவர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது.
இதுவரை தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 36,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. எனவே, சமூக நலம் கருதி தமிழக அரசானது காலி பணியிடங்களை நிரப்பி, பயிற்சி மருத்துவர்களுக்கும், பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கும் அவர்களின் குறைகளைத் தெரிவிக்க மருத்துவர்கள் நலவாரியம் அமைக்க வேண்டும்” என்றார்.
70 மணி நேரம் உழைப்பு?
சமீபத்தில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனரான நாராயண மூர்த்தி, “இந்தியாவின் உற்பத்தியை அதிகரிக்க இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும்” என்று கூறியது தற்போது பல்வேறு தரப்புகளில் விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அவர் அளித்த பேட்டியில், “1981-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவியபோது நான் மணிக்கணக்கில் வேலை செய்வேன். தினசரி காலையில் 6.20 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்றுவிடுவேன். இரவு 8.30 மணிக்குத்தான் அலுவலகத் திலிருந்து கிளம்புவேன்.
மேலும் வாரத்துக்கு 6 நாள் வேலைக்குச் செல்வேன். இன்று செழிப்பாக உள்ள ஒவ்வொரு நாடும் கடின உழைப்பின் மூலம் உயர்ந்தது. நாம் வறுமையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கடின உழைப்புதான் என என் பெற்றோர் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். என் 40 ஆண்டுக்கால தொழில் வாழ்க்கையில், நான் வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை செய்திருக்கிறேன். குறிப்பாக, 1994-ம் ஆண்டு வரை வாரத்துக்கு 85 முதல் 90 மணிநேரம் வேலை செய்வேன். என் கடின உழைப்பு வீண்போகவில்லை” என்று கூறியிருந்தார்.
அதீத பணிச்சுமையால் மருத்துவர்கள் உயிரிழப்பு ஒருபுறம் இருக்க… மற்றொரு புறம் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று வெற்றி பெற்ற ஒரு தொழிலதிபர் கருத்து தெரிவித்துள்ளார். இது இரண்டையும் எப்படிப் பார்ப்பது, ஒரு மனிதன் அதிகபட்சமாக எத்தனை மணி நேரம் வேலை பார்க்கலாம் என்று விளக்குகிறார் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரும் மனநல மருத்துவருமான ராமானுஜம் கோவிந்தன்.
“ஒரு நபருக்கான சராசரி வேலை நேரம் 8 மணி நேரம். இருந்தாலும் அது அந்த வேலையைச் செய்யும் நபரின் உடல் தகுதி மற்றும் மனநிலையைப் பொறுத்தது.
மற்ற வேலைகளுடன் ஒப்பிடும்போது மருத்துவர்கள் மற்றும் ஐ.டி ஊழியர்கள் சிறிது நேரம் வேலை பார்த்தாலே பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் இவர்களுக்கு 8 மணி நேரம் வேலை பார்த்தாலே அதிகப்படியான மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படும். 24 மணி நேரம் வரை வேலை செய்வது என்பது ஒருநபரின் ஆற்றலுக்கு மிக மிக அதிகபட்சமான அழுத்தத்தைக் கொடுப்பது.
இதன் மூலம் அவர்களுக்கு அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு, மாரடைப்புகூட ஏற்படலாம். அவர்களின் சிந்தனைத் திறனும் மழுங்கியிருக்கும். அதனால் அச்சமயங்களில் அவர்கள் எடுக்கும் முடிவு மிக தவறானதாகக் கூட அமையலாம். ஒரு மனிதனின் மூளை சராசரியாக 90 நிமிடங்கள் மட்டுமே ஒரு வேலையின் மேல் கவனம் செலுத்தும்.
இதனால் ஒரு நபர் தொடர்ச்சியாக வேலை செய்வதைத் தவிர்த்து 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிய இடைவெளி எடுக்கலாம். அதனால் அவர்களின் மூளைக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றாலும் வேலையின் போது ஓரிரு மணி நேரங்களுக்கு இடையே 5 நிமிட பிரேக் எடுத்து சிறிய நடைப்பயிற்சி செய்யலாம். இது மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்ச்சியைத் தரும்” என்றார்.