- ஆ. விஜயானந்த்
- பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Udhayanidhi Stalin facebook page
‘உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்’ எனத் தமிழநாடு அமைச்சர்களே கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ‘ உதயநிதியை குளிர்விப்பதற்காக இதுபோன்று தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர். அப்படியொரு சிந்தனை உதயநிதிக்கு இருந்தாலும் இந்த விவகாரத்தில் பா.ஜ.க அரசியல் செய்யவே வாய்ப்பு அதிகம்’ என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.
அமைச்சர்களின் தீர்மானம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தி.மு.க தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 30 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், ‘வரும் ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்ததாக, ‘சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்’ என்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, பழநி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்திலும், ‘முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாகக் கொண்டாடுவது’ என்ற தீர்மானத்தையும் ‘உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்’ என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தொண்டன் என்ற பொறுப்பே போதும்
இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மத்திய மாவட்ட செயற்குழு கூட்டத்திலும், ‘உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்ற தீர்மானத்தை கடந்த காலங்களிலும் தி.மு.கவின் முன்னணி நிர்வாகிகள் நிறைவேற்றியுள்ளனர். அது உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பானது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இடைத்தேர்தல்களிலும் உதயநிதி தீவிர கவனம் செலுத்தினார். ‘கட்சிக்காக உழைக்கும் அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவியைக் கொடுக்க வேண்டும்’ என அப்போதும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், ‘ எந்தப் பதவியையும் எதிர்பார்த்து நான் கட்சிக்குள் வரவில்லை. தி.மு.கவின் தொண்டன் என்ற பொறுப்பே போதுமானது’ எனவும் உதயநிதி விளக்கம் அளித்தார். ஆனால், அடுத்து வந்த சில மாதங்களிலேயே இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார். தற்போதும் அதே பாணியில் குரல் எழுப்பப்படுவதும் அரசியல் வட்டாரத்தில் உற்று கவனிக்கப்படுகிறது.
தலைமைக்கு தர்மசங்கடம்
அதேநேரம், கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுத்து உதயநிதி தரப்பில் அறிக்கை ஒன்றும் வெளியாகியுள்ளது. ‘உங்கள் அன்புக்கு நன்றி’ எனப் பதிவிட்டு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ‘திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் எனக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானங்களை நிறைவேற்றி தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைத்திருப்பதை அறிந்தேன். என்னுடைய தொடர் பணிகள் மீதும் முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அன்புக்கும் நான் என்றென்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அந்த அறிக்கையில், ‘கழகம் வழங்கிய வாய்ப்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகத் தொகுதி மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அதற்குரிய தீர்வுக்கான மக்கள் பணியையும் கழகத் தலைவர் மற்றும் கழக முன்னோடிகளின் வழிகாட்டுதலில் இளைஞர் அணியின் செயலாளராக தமிழ்நாடு முழுவதும் பயணித்து என்னால் இயன்றவரையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறேன். இளைஞர்களிடம் கழகத்தைக் கொண்டு சேர்க்க அடுத்தகட்ட திட்டமிடல்களுடன் பாசறைக் கூட்டங்களை நடத்துவது, நலத்திட்ட பணிகளில் ஈடுபடுவது என பலவற்றுக்குமான பயணங்களுக்குத் தயாராகி வருகிறேன்’ எனக் குறிப்பிட்டு,
‘ என் மீதுள்ள அன்பின் காரணமாக எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்குமாறு தீர்மானத்தை நிறைவேற்றி தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதிக்கு விருப்பம் உள்ளதா?
பட மூலாதாரம், Udhayanidhi Stalin facebook page
உதயநிதியின் அறிக்கை தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், ” சினிமா தொடர்பான வர்த்தகத்தை உதயநிதி தொடர்ந்து கையில் வைத்திருந்தால் அவர் அமைச்சர் பதவியில் அமர்வதற்கு வாய்ப்பில்லை. இதற்குக் கடந்தகால உதாரணங்களும் உள்ளன. முதலமைச்சராக இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர் திட்டமிட்டார். இதனை கருணாநிதி எதிர்த்தார். இந்த விவகாரம் வேறு ஒரு வடிவில் உச்ச நீதிமன்றம் சென்றது. இதுதொடர்பாக பதில் அளித்த அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், ‘முதலமைச்சர் பொறுப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடிக்கலாம்’ எனக் கூறி குழப்பினார். இதையடுத்து, சினிமாவில் நடிக்க உள்ளதாக எம்.ஜி.ஆர் விளம்பரமும் செய்தார்.
அதேநேரம், அமைச்சராக பதவி வகிப்பவர்கள், வேறு தொழில் பார்க்க முடியாது. தற்போது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ என்ற சினிமா நிறுவனத்தை உதயநிதி நடத்தி வருகிறார். வரும் நாள்களில் சில படங்களில் நடிப்பதற்கும் அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தநேரத்தில் உதயநிதியை குளிர்விப்பதற்காக இதுபோன்று தீர்மானங்களை நிறைவேற்றுவதாகத்தான் பார்க்க முடிகிறது. அப்படியொரு சிந்தனை உதயநிதிக்கு இருந்தாலும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை போன்றவர்கள் விழிப்புடன் உள்ளனர். இதுபோன்று ஒரு விவகாரம் கிடைத்தால் சிலர் நீதிமன்றம் செல்லவும் வாய்ப்புள்ளது. அப்படியொரு சூழல் நடக்காது என்றே நினைக்கிறேன்” என்கிறார்.
” சிம்மாசனத்தின் மீது அரசருக்குத்தான் விசுவாசம் இருக்க வேண்டும். அவரைவிட கூடுதல் விசுவாசத்தை அவரைச் சார்ந்துள்ள சிலர் காட்டுவது என்பது காலம்காலமாக நடந்து வருகிறது. இந்தத் தீர்மானத்துக்கும் உதயநிதிக்கும் தொடர்புள்ளதா எனத் தெரியாது. ஒருவேளை அமைச்சராக வேண்டுமென உதயநிதி விரும்பினாலும் பல விஷயங்களை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு அவர் விருப்பப்படவில்லை என்பதையே அவரது அறிக்கை சுட்டுக் காட்டுகிறது”என்கிறார் ஷ்யாம்.
யாருக்கும் தர்மசங்கடம் இல்லை
” உதயநிதியின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைத் தலைமை கொடுக்க வேண்டும் எனத் தொண்டர்கள் விரும்புகின்றனர். சட்டமன்ற உறுப்பினராக அவர் பேரவையில் ஆற்றிய உரை, பண்பட்ட அரசியல்வாதியாக எடுத்துக் காட்டியது. சேப்பாக்கம் தொகுதியை அவர் பராமரிக்கும்விதம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இரண்டு தேர்தல்களில் அவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், கட்சி வெற்றி பெறுவதற்கும் உதவியாக இருந்தது. தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கென்று செல்வாக்கு உள்ளது. அடுத்த தலைமுறை அரசியல் என்பது இளைஞர்களை நோக்கித்தான் செல்ல வேண்டும் என்றால் அவரை அமைச்சராக்குவதில் எந்தவித தர்மசங்கடமும் யாருக்கும் இல்லை” என்கிறார், தி.மு.க செய்தித் தொடர்பாளரும் தலைமைக் கழக வழக்குரைஞருமான சூர்யா வெற்றிகொண்டான்.
பட மூலாதாரம், Udhayanidhi Stalin facebook page
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், ” எம்.எல்.ஏவாக பதவியேற்ற ஓராண்டுக்குள்ளேயே உதயநிதி அமைச்சராக்குவதா என்கிறார்கள். முதல்முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்ற மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர். முதல்வர் குடும்பத்திலேயே இன்னொருவர் மாநிலத்துக்கு அமைச்சராக இருந்தால், அரசு இயந்திரம் முதலமைச்சருக்கு இணையாக இயங்கும். இதனை நடைமுறையில் நம்மால் உணர முடியும். உதாரணமாக, முதல்வரின் குடும்பத்தில் ஒருவராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார். இதனால் பள்ளிக்கல்வித் துறை எந்தளவுக்கு வளர்ந்து வருகிறது என்பதை உணர முடியும். நிதித்துறையும் எந்தளவுக்கு வளர்கிறது என்பதையும் கவனிக்கிறோம். அந்தவரிசையில் முக்கிய துறையின் அமைச்சராக உதயநிதி இருந்தால் அந்தத் துறையின் பங்களிப்பு உச்சத்துக்குச் செல்லும்” என்கிறார்.
தீர்மானம் தொடருமா?
” உதயநிதியின் அறிக்கைக்குப் பிறகு தீர்மானம் நிறைவேற்றுவது தொடராது என எடுத்துக் கொள்ளலாமா?” என்றோம். ” நாட்டு மக்களின் நலனைக் கருதித்தான் அவரை அமைச்சராக்க வேண்டும் என்கிறோம். மாவட்டவாரியாக தீர்மானம் நிறைவேற்றுவது என்பது தொண்டர்களின் உணர்ச்சியை வெளிக்காட்டுகிறது. யாருடைய கட்டாயத்தின் பேரிலும் இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அவரைக் கேட்டுவிட்டு யாரும் தீர்மானம் நிறைவேற்றவில்லை. இது கட்சித் தொண்டர்களின் உணர்வாகத்தான் பார்க்கிறோம்” என்கிறார்.
மேலும், ” உதயநிதியின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்குமாறு பல லட்சம் இளைஞர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் அன்பில் மகேஷ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். உதயநிதி அமைச்சரான பிறகுதான் இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றும் பணிகள் நிறைவடையும்” என்கிறார்.
மோதி ஆட்சியின் 8 ஆண்டுகள்: தமிழ்நாட்டு மக்கள் என்ன சொல்கிறார்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: