வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
நேற்று வைத்த சாதம் மீதமிருக்க தண்ணீர் ஊற்றி வைத்திருந்தேன். அதை கரைத்துக் குடிக்கலாமென தேடிய போது என் அத்தை அதெல்லாம் வேண்டாம் வெறும் வயிற்றில் நீச்சத் தண்ணீர் குடித்தால் சளி பிடித்துக் கொள்ளும் காபி போட்டுக் குடி என்றார்.
இளநீர் குடிக்க நினைத்து அம்மாவிடம் கேட்டபோது மழை காலமாக இருக்கிறது வேண்டாம் என்று கூறினார். அதற்கு பதிலாக ஏதாவது சோடா குடிக்க அறிவுறித்தினார்.
உடம்பு சரியில்லை என்றால் பார்க்க வருபவர்கள் கையில் பூஸ்ட், ஹார்லிக்ஸ் இருக்கிறது. மறக்காமல் பாலில் கலந்து குடி உடம்பிற்கு நல்லது என்று வற்புறுத்துகின்றனர்.
கோவிலுக்கு சென்றால் பிரசாதமாக இரண்டு பிஸ்கட் துண்டுகளை தருகின்றனர்.
உறவினர் ஒருவர் வீட்டில் சாப்பிட நேர்ந்த பொழுது தக்காளி சட்னி சில்லென்று இருந்தது. கேட்டதற்கு நேற்று ஆட்டியது பிரிட்ஜில் இருந்ததாக கூறினார்கள்.
கொள்ளு ரசம் குடித்துக் கொண்டிருக்கிறேன் இரண்டு நாளாக இரும்பல் என்று பெரியம்மாவிடம் நான் கூற கொள்ளு ரசம் சூடு மருந்து வாங்கி சாப்பிடு உடனே சரி ஆகும் என்றார்.
இவையெல்லாம் இயல்பே இதற்கு நானும் பழகிக் கொண்டேன். இவற்றை போலத்தான் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகிறோம்.
ஒரு நாள் வீட்டிற்கு வந்த மாமா டீ, காபி குடிப்பதை விட்டுவிட்டதாகவும் இப்பொழுது தான் உடல் நிலை சீராக இருப்பதாகவும் கூறினார்.