மூலிகையை வைத்து இயற்கையாக `லிப்ஸ்டிக்’ (உதட்டுச் சாயம்) தயாரிக்க முடியுமா? நிச்சயம் முடியும்! ஒரு குளுகுளு மூலிகை உண்டு. அதன் பழங்களை `லிப்ஸ்டிக்’ பழங்கள் என்று அழைப்பார்கள் முந்தைய தலைமுறை சிறுவர் சிறுமியர்.
பழங்காலம் முதலே இயற்கையாக முகத்தை மெருகேற்றிக்கொள்ள பல்வேறு மூலிகை ரகங்களும் அவற்றின் சாரங்களும் பயன்பட்டு வந்திருக்கின்றன! அவ்வகையில் ’பசலை’ எனும் மூலிகையின் செவ்விய பழங்களை விரல்களுக்கு இடையில் வைத்துப் பிசைந்து உதடுகளில் பூசிக்கொள்ளும் வழக்கம் நம்மிடம் இருந்திருக்கிறது.
பசலையின் நிறத்திற்கு, அதிலுள்ள `ஆந்தோசையனின்கள்’ காரணமாகின்றன. உணவுகளில் சேர்க்கப்படும் இயற்கை சாயத்திற்கு (Natural dye) இதன் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒப்பனைப் பொருளாக பசலையின் பழங்கள் பயன்பட, பசலைக் கீரையோ நன்மருந்தாகப் பயன்படுகிறது. இதில் பச்சை மற்றும் சிவந்த நிறமுடைய தண்டுகளைக் கொண்ட வகைகள் உள்ளன. கொடிலை, கொடிப்பயலை, கொடிவசலை, பசளை, கொடியலை என்பன கொடிப்பசலைக்கு இருக்கும் வேறு பெயர்கள்.

காலத்திற்கேற்ற உணவு
அதீத குளிர்ச்சித் தன்மையுள்ள பசலைக் கீரையை, வெயில் காலத்தில் அதிகளவு பயன்படுத்தலாம். மழைக்காலத்தில் பசலையின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், வெயில் காலத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடிய உணவுகளையும், மழைக்காலத்தில் உடலுக்கு வெப்பத்தைத் தரக்கூடிய உணவுகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும்!
பசலைக் கீரையோடு பருப்பு சேர்த்து கடைந்து, சின்ன வெங்காயம், சிறிது மிளகுத்தூள் சேர்த்து சமைத்து சாப்பிட அமிர்தத்திற்கு நிகரான சுவையைக் கொடுக்கும். வெப்ப நோய்களை உடனடியாக வேரறுக்க, பசலையை எப்போதும் வீட்டோடு வைத்துக்கொள்ளுங்கள். இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ரத்த விருத்திக்கு உதவும். குறைவான கலோரிகளுடன் நிறைவான நுண்ஊட்டங்களை வழங்குவதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு பசலை சிறந்த உணவு.
வேனிற்கால சிக்கலுக்கு தீர்வு
வேனிற்காலங்களில் இளநீர், நுங்கு ஆகிய வெப்பத்தைக் குறைக்கும் இயற்கையின் அதிசயங்களோடு சேர்த்து, பசலைக் கீரையையும் தவறாமல் உணவு முறைக்குள் இணைத்துக் கொள்ளுங்கள்! வேனிற்காலத்தை எவ்வித தொந்தரவுகளும் இன்றி கடந்துவிடலாம். வெப்பம் காரணமாக ஏற்படும் நீரடைப்பை போக்கவும் பசலைக்கீரை உதவும். கடினப்பட்ட மலத்தை இளக்கும் தன்மையும் பசலைக்கு உண்டு.

வெப்பம் தணிக்கும்
நீண்ட தூர நடைப்பயணத்தின் போது உடலின் வெப்பத்தைக் குறைக்கும் தலைக்கவசமாக (Cap) பசலை உதவும். பசலைக்கீரையை, புளி நீக்கி சமைத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வரலாம். உடல் வலிமையை அதிகரிப்பதற்கான இயற்கை ரெசிப்பி இது.
ஆய்வுகளின் முடிவில் `டெஸ்டோஸ்டிரான்’ ஹார்மோனின் அளவை பசலை அதிகப்படுத்துவதாக (Increases Basal Testosterone production) தெரியவருகிறது. முறையற்ற மாதவிடாயை ஒழுங்குப்படுத்த, பசலையின் வேரை அரைத்து அரிசி கழுவிய நீரில் கலந்து பருகுவது ஒரிசா மக்களின் வழக்கம்.
வெயில் காலங்களில் உண்டாகும் வேனல்கட்டிகளுக்கு இதன் இலைகளைச் சிதைத்துக் கட்ட விரைவில் பலன் கொடுக்கும். வயிற்றுப் புண்ணை குணமாக்கும் தன்மை இருப்பதால் (Gastro protective activity), இதன் இலைச்சாறு ஒரு ஸ்பூனோடு, சிறிது வெண்ணெய் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
வலி நீக்கும் மருந்து
பசலையின் இலைகளை தண்ணீரிலிட்டு துழாவ, நீருக்கு சிறிது கொழகொழப்புத் தன்மை கிடைக்கும். அந்தக் கொழகொழப்புப் பசையை வலியுள்ள இடங்களில் வலி நீக்கும் மருந்தாகத் தடவலாம். கொழகொழப்புத்தன்மையுடன் சூப் தயாரிக்க ஆசைப்படுபவர்கள், கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் சூப் பவுடர்களுக்குப் பதிலாக, பசலை ஊறிய நீரை வைத்து சூப் வகைகளைத் தயாரிக்கலாம்.
மிளகு, பூண்டு, சில காய்கள் கொண்டு சமைக்கப்படும் சத்துமிக்க `உதான்’ எனப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரம்பர்ய சூப் வகையில் பசலை சேர்க்கப்படுகிறது. பலாக்கொட்டையோடு பசலையைக் கொண்டு தயாரிக்கப்படும் குழம்பு வகை, கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் பிரபலம்.

பசலையின் இலைகளை அரைத்து நெற்றியில் பற்று போட்டால், தலைவலி சட்டென மறையும். கசகசாவோடு பசலை இலைகள் மற்றும் அதன் தண்டுகளைச் சேர்த்தரைத்து, நெற்றியில் பூச நல்ல உறக்கத்தை உண்டாக்கும். பசலை இலைச் சாற்றை முகத்தில் பூசிவர முகம் பளபளப்படையும்.
மருத்துவ குணம் நிறைந்த பசலை விதைகளைத் தூவி வீட்டிலேயே வளர்க்கலாம்.
தாவரவியல் பெயர்:
Basella alba / Basella rubra
குடும்பம்:
Basellaceae
கண்டறிதல்:
கொடிவகையைச் சேர்ந்தது. பச்சை மற்றும் சிவந்த நிறமுடைய பசலைவகைகள் உள்ளன. மெல்லிய தண்டுடையது. பழங்கள் செக்கச் சிவந்த நிறம். உலர்ந்த பின் பழங்கள் கறுப்பாகத் தோற்றமளிக்கும்.
தாவரவேதிப் பொருள்கள்:
Calcium, Vitamin – A, Oxalic acid, Ferulic acid.
கொடிப்பசலை… நோய்களைப் போக்கும் கொடிவீரன்!