
கால், கையை நீட்டி மடக்குவதே சிரமமாக இருக்கிறது, இதில் எங்கிருந்து யோகா செய்வது எனப் புலம்புபவர்கள் பலர்.

யோகா செய்வதால் உளவியல் மற்றும் உடல் ரீதியாகக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவில்லாதவை.

யோகா செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது. நீங்கள் ஏன் அவசியமாக யோகா செய்ய வேண்டும்? காரணங்களைப் பார்ப்போம்…

மன அமைதி: யோகா செய்வதன் மூலம் மனதை குழப்பமற்ற தெளிவில் வைத்துக்கொள்ள முடியும். இந்த மனநிலையில் எடுக்கும் முடிவுகள், சிறப்பாக அமையும்.

மனநிலை மாற்றம்: `மனசு சரியில்லை’ என்று சொல்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள், யோகா செய்வதன் மூலம் அதற்குத் தீர்வு காணலாம். யோகா செய்யும் போது நம் மூளையில் gamma-aminobutyric acid (GABA) என்ற ரசாயனம் அதிகரிக்கிறது. இதனால் மன அழுத்தம் குறையும்.

லைஃப்ஸ்டைல் சகா: விளையாட்டு, மருத்துவம் என நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், உங்கள் வாழ்க்கை முறையை சிறப்பாக்கும் தோழனாக யோகா இருக்கும். உடல் வலுவை அதிகரித்து, மனத்திடத்தை உருவாக்கும்.

ஆழ்ந்த தூக்கம்: இன்று பலருக்கு இருக்கும் முக்கியமான பிரச்னை, தூக்கமின்மை. மேலும் இரவில் பதற்றத்துடன் எழுவது, கனவுகளால் ஏற்படும் தொந்தரவுகள்… அனைத்திற்கும் யோகா தீர்வை தர வல்லது.

நெகிழ்வுத்தன்மை: இன்று உடல் உழைப்பு, சிறு நடை கூட இல்லாததால் பலருக்கும் எலும்பு இணைப்புகள், தசைகள் என உடல் இறுகிப்போயிருக்கிறது. யோகப் பயிற்சி, உடலுக்கு நெகிழ்வுத்தன்மையை தரும்.

தைரியம்: யோகா மன தைரியத்தை அதிகரிக்கிறது. நம் உடலுக்கு நாம் எண்ணுவதைக் காட்டிலும் ஆரோக்கியமும் பலமும் இருக்கிறது என்று உணர்ந்துவிட்டால் நம் தைரியம் அதிகமாகும்.

வலி நிவாரணி: யோகா ஒரு சிறந்த வலி நிவாரணி. தலைவலி, மூட்டுவலி, இடுப்புவலி என ஒவ்வொரு வலிக்கும் ஒவ்வொரு யோகா உள்ளது. மருந்து மாத்திரையில் வாழ்பவர்கள், யோகா செய்வதன்மூலம் எவ்வித பக்கவிளைவும் இன்றி வலியில் இருந்து விடுபடலாம்.

அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துகள்…!