சென்னை: அதிமுகவை யார் கைப்பற்றப்போகிறார்கள் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாதம் நடக்கிறது. விரைவில் விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுக பல பிரிவுகளாக சிதறி கிடக்கிறது. இதில் முக்கியமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியினரும் தற்போது அதிமுக எங்களுக்குத்தான் என்று கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி எடப்பாடி ஆதரவாளர்கள் அனைவரும் சேர்ந்து, அதிமுக பொதுக்குழுவை கூட்டினர். பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர்.
இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக அதிமுக கட்சியில் இருந்தும், கட்சியின் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். இந்த பொறுப்புகளுக்கு எடப்பாடி ஆதரவாளர்கள் உடனடியாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தன்னிடம் அனுமதி பெறாமல் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி அணியினர் கூட்டி உள்ளனர். இந்த பொதுக்குழுவும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், ‘குறுக்கு வழியில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அதிகாரத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியின் பதவியை ரத்து செய்ய வேண்டும்’ என்று தனது வாதத்தை முன் வைத்தார். இதையடுத்து வழக்கு நேற்று 3வது நாளாக நடந்தது. இரண்டு தரப்பினரின் வாதங்களும் நேற்றுடன் நிறைவு பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், வழக்கு விசாரணையை 10ம் தேதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீடிக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா, ஜூலை 11ம் தேதிக்கு முன்பு இருந்த அதிமுகவே தொடர அனுமதிக்கப்படுமா என்பது குறித்த தங்களது தீர்ப்பை அளிக்க உள்ளனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமி பக்கம் போகுமா அல்லது ஓ.பன்னீர்செல்வம் பக்கம் போகுமா, அல்லது தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருமா என்று குழப்பத்தில் தீர்ப்பை எதிர்நோக்கி தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரண்டு பேரும் போட்டி போட்டு தங்கள் அணியை முன்னிறுத்துவதில்தான் அக்கறை காட்டுகிறார்கள். கட்சி வளர்ச்சி பற்றியோ, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது, யாருடன் கூட்டணி என்பது பற்றியோ சிந்திக்காமல் உள்ளனர். இதனால் தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.
அதிமுகவில் தற்போதுள்ள உட்கட்சி பூசலை தொடர்ந்து, தமிழகத்தில் பாஜ தன்னை 2வது பெரிய கட்சியாக நினைத்துக்கொண்டு, தனது உத்திகளை செயல்படுத்தி வருகிறது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜ தலைவர்கள் அதிமுக தலைவர்களையே மட்டம்தட்டி பேசி வரும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இதனால், தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தும், எதிர்க்கட்சியாக செயல்பட முடியாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கட்சியின் முக்கிய தலைவர்கள் மட்டுமன்றி, நிர்வாகிகள், தொண்டர்கள், ஏன் அதிமுக கூட்டணி கட்சிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.