ஈரோடு கிழக்கு படுதோல்வி குறித்து விவாதிக்க 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி தலைமையில் நடக்கிறது

Share

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி குறித்து விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 9ம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ம் தேதி எண்ணப்பட்டது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வெறும் 43,923 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

திமுக கூட்டணி வேட்பாளர் கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்கு அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.  அதிமுகவின் இந்த தோல்வி, அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரு பிரிவாக செயல்பட்டு வந்தனர். ஆனால், தன்னிடம் உள்ள நிர்வாகிகள் செல்வாக்குடன் அதிமுக கட்சியை கைப்பற்ற கடந்த இரண்டு வருடமாக எடப்பாடி போராடி வந்தார். இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் சென்று இரட்டை இலை சின்னத்தையும் எடப்பாடியே கைப்பற்றினார்.

இதனால் உற்சாகம் அடைந்த எடப்பாடி அணியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெறாவிட்டாலும், கனிசமான வாக்கை பெற்றுவிடலாம் என்று மனக்கோட்டை கட்டி இருந்தனர். ஆனால், வழக்கம்போல் கடந்த நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தலில் கொடுத்த தோல்வியைபோல் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் படுதோல்வியை அதிமுகவுக்கு பொதுமக்கள் பரிசாக அளித்தனர். இதில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையை அதிமுக தொண்டர்களோ, பொதுமக்களோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. இதை வைத்துதான், ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு முழு காரணம் எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை’’ என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.

 இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் வருகிற 9ம் தேதி சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட படுதோல்வி குறித்து மாவட்ட செயலாளர்கள் பலரும் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அன்று நடைபெறும் கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com