ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்
இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக
பதவியேற்றார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா, கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஜனவரி 18ம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். தொடர்ந்து இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டன. இதில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரை 66,233 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஈவிகேஎஸ். இளங்கோவன் பதவியேற்றுக் கொண்டார்.சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு இளங்கோவனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஈவிகேஎஸ். இளங்கோவன் உறுதிமொழி ஏற்றார். சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றிய நிலையில், 38 ஆண்டுக்கு பின் மீண்டும் சட்டசபைக்கு செல்கிறார். இதன்மூலம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. இந்த பதவியேற்பு விழாவில் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.