ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்; இபிஎஸ், ஓபிஎஸ் சுயேட்சை சின்னத்தில் போட்டி?: இரட்டை இலை கிடைக்காததால் தொண்டர்கள் குழப்பம்

Share

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதனால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணி சார்பில், கடந்த 2021ம் ஆண்டு போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்து விட்டது. அதேநேரம், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தமாகா, தற்போது அதிமுகவே போட்டியிடும் கூறி ஒதுங்கிக் கொண்டது.

தற்போது காங்கிரசுக்கும் – அதிமுகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதன்மூலம், இரண்டு அணிகளுக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையுமே அங்கீகரித்துள்ளது. இரண்டு பேரும் இணைந்து வேட்புமனுவில் கையெழுத்து போட்டால்தால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். தற்போது இருவரும் தனித்தனியே போட்டியிட முடிவு செய்துள்ளதால் ‘இரட்டை இலை’ சின்னம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளனர். சுயேட்சை சின்னத்திலாவது போட்டியிட்டு, அதிமுகவில் யார் பெரியவர்கள் என்பதை நிரூபித்துவிட வேண்டும் என்பதில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் களம் காண உள்ளனர். அதிமுக தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தற்போது இருவரும் தனித்தனியே போட்டியிட்டு இரட்டை இலை சின்னத்தை முடக்க காரணமாகி விட்டதால், அதிமுக தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com