சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணாமலையின் பிரசாரத்தை அதிமுகவினர் புறக்கணித்தனர். அதே நேரத்தில் பிரசாரத்தின் போது எடப்பாடி பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் களை கட்டியுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என பிரசாரம் அனல் பறந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே நிலவி வரும் மோதலை தொடர்ந்து, பொதுக்குழு தொடர்பான வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இதற்கிடையே, இரு தரப்பும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்தது. ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் போட்டியிட ரெடியான நிலையில், வலுவான வேட்பாளர் நிற்க வேண்டும் என ஆரம்பம் முதலே பாஜ சொல்லி வந்தது. அதேசமயம், பாஜ போட்டியிட விரும்பினால் நாங்கள் விட்டுக்கொடுக்க தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். தேர்தல் தேதி அறிவித்த உடனே முதலில் தேர்தல் பணிக்குழுவை தமிழக பாஜ அறிவித்தது. இதனால் இந்த தேர்தலில் பாஜ போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பாஜகவுக்கு ஈரோட்டில் செல்வாக்கு இல்லாததால் படுதோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது.
இதற்கிடையே, இரட்டை இலை கேட்டு எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களே அதிகாரப்பூர்வ வேட்பாளரை தேர்ந்தெடுக்க வெண்டும் என்று தீர்ப்பு வந்தது. இதையடுத்து, எடப்பாடி அணி, கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக முன்மொழிந்து பொதுக்குழு ஆதரவுடன் தேர்வு செய்தது. ஓ.பன்னீர்செல்வம் தனது அணி வேட்பாளரை வாபஸ் பெற்றார். பாஜக கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவளித்து தனது வேட்பாளரை திரும்பப் பெற்றார். இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. இதற்கிடையே, அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் அணியை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அணி அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் ஓபிஎஸ் அணியினர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் அணியை பாஜக நடத்திய விதம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவாக அண்ணாமலை செயல்படுகின்றார் என்று பகிரங்கரமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெறும் பிரச்சாரங்களில் பாஜகவில் யாரும் கலந்து கொள்ளவில்லை. தேர்தலுக்கு ஆதரவு மட்டும் என்ற அடிப்படையில் மூத்த தலைவர்கள் ஒரு சிலர் மட்டுமே சென்று தலையை காட்டி வருகின்றனர். மேலும் பிரசாரங்களில் கூட்டணியின் முக்கிய கட்சியான பாஜ கொடிகள் கூட தென்படவில்லை என்று கூறுகின்றனர்.
ஆனால், பாஜ பிரசாரம் செய்வதை எடப்பாடி பழனிச்சாமி அணியினர் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இரண்டு நாட்கள் பிரசாரம் செய்வதாக அறிவித்தார். அதாவது பிப்ரவரி 19 மற்றும் 20ம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என்று பாஜ தலைமை அறிவித்தது. அதே நேரத்தில் அண்ணாமலையுடன் இணைந்து பிரசாரம் செய்ய மாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது பாஜவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாஜ தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து ஈரோடு இடையன்காட்டுவலசு, தெப்பக்குளம், மகாஜன பள்ளி, சூரம்பட்டி நால்ரோடு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிரசாரம் மாலை 5 மணிக்கு இடையன்காட்டு வலசு பகுதியில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பாஜவினர் மட்டுமே ஆங்காங்கே கொடிகளை பிடித்தபடி நின்றிருந்தனர். கூட்டணி கட்சியான அதிமுக மற்றும் பொதுமக்களின் கூட்டம் இல்லாதது குறித்து அண்ணாமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், கோவையில் இருந்து நேரடியாக பிரசார கூட்டத்திற்கு வர வேண்டிய அண்ணாமலை நேராக ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் ரிசாட்டிற்கு சென்று விட்டார். பின்னர், அதிமுக மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி ஆகியோரை தொடர்பு கொண்டு கூட்டம் இல்லாதது பற்றியும் குறிப்பாக அதிமுகவினர் கூட்டத்திற்கு வராமல் இருப்பது பற்றியும் பேசினார். அதன்பின், வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் கொடியுடன் பிரசார கூட்டத்திற்கு வந்தார். ஆனாலும், கூட்டம் எதிர்பார்த்தபடி கூடவில்லை. கோவை தொண்டாமுத்தூரில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒயிலாட்ட குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதைக்காண பொதுமக்கள் கூட்டம் வரத்தொடங்கினர்.
ஆனால், பாஜ பிரசார கூட்டத்திற்கு 100 அடி தூரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசார கூட்டம் நடைபெற்றது. நீண்ட நேரமாகியும் அண்ணாமலை வராததால் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்கள் அங்கிருந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை பார்க்க சென்று விட்டனர். நேரம் செல்ல, செல்ல மொத்த கூட்டமும் காணாமல் போய்விடும் என்று அங்கிருந்த நிர்வாகிகள் தகவல் தெரிவித்ததையடுத்து 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு பிரசார கூட்டத்திற்கு பாஜ தலைவர் அண்ணாமலை வந்தடைந்தார். அண்ணாமலையின் பிரசாரத்தை அதிமுகவினர் புறக்கணித்தது பாஜவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரசாரத்தின் போது அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெயரை எல்லாம் கூறிய அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி பெயரை கூறாதது இருதரப்பு மோதலை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.