ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பிரபலங்களால் சூடுபிடிக்கும் பிரசாரம்

Share

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கவுள்ளது. ஜனவரி 18ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அடுத்த நாளே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், வீட்டுவசதி துறை அமைச்சருமான சு.முத்துசாமி தலைமையில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக உள்கட்சி குழப்பம் காரணமாக நீண்ட இழுப்பறிக்கு பின்னர் வேட்பு மனுத் தாக்கலின் இறுதி நாளன்றே அக்கட்சியின் வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், திமுக சார்பில் 32 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு மாவட்டங்களின் செயலாளர்கள் ஈரோட்டில் முகாமிட்டு கூட்டணி கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்காக தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக தேர்தல் பணிக்குழு தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வார்டு பொறுப்பாக ஒதுக்கப்பட்டு தினமும் காலையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம், மாலையில் அமைச்சர்கள் தலைமையில் வீடுவீடாக பிரசாரம் என திட்டமிட்டு தீவிர களப் பணியாற்றி வருகின்றனர். வேட்பு மனுத் தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என 77 பேர் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் பிரபலங்கள் மற்றும் பேச்சாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தலுக்கு இன்னும் 15 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, திமுக தலைவரும், தமிழ் நாடு முதலைமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தின் இறுதி நாள்களான பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் 2 நாள்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 19ம் தேதி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

இதேபோல, திமுக சார்பில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 18, 19ம் தேதிகளிலும், எம்.பி.கனிமொழி 16ம் தேதியும் அடுத்தடுத்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். இதுதவிர காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், அக்கட்சியின் பிரபலங்களான எம்.பி.கார்த்தி சிதம்பரம், எம்.எல்.ஏ. விஜயதாரணி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் 17, 18ம் தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளார். இந்த நிலையில், அதிமுக சார்பில் அக்கட்சியை சேர்ந்த நடிகர்கள் உள்ளிட்ட பேச்சாளர்கள் பலர் இருந்தும் இதுவரை யாரும் பிரசாரத்துக்கு வரவில்லை. மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே வேட்பாளர் தென்னரசுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக.,வின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 15 முதல் 17 வரையிலும், மீண்டும் 24, 25ம் தேதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள கடைசி 2 நாட்களிலேயே எதிர்க்கட்சி தலைவரும் தங்களது வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார். மேலும், அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அதன் கூட்டணி கட்சியான த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் 19ம் தேதிக்கு பின்னர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும் நடிகரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான சீமான் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து, நாளை பொதுக்கூட்ட மேடையில் பேசவுள்ளார். வரும் 19ம் தேதி முதல் பிரபல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

கொடி அணிவகுப்பு: நாடே எதிர் நோக்கி இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 32 வாக்குச் சாவடிகள் பதட்டமானவையாக காணப்பட்டுள்ளன. வழக்கமான பாதுகாப்பு பணிகளுக்காக உள்ளூர் போலீசாருடன் இணைந்து பணியாற்ற சென்னை, வேலூரில் இருந்து தமிழ் நாடு சிறப்பு காவல் படையினர் 160 பேர், 3 கம்பெனி துணை ராணுவத்தினர் 360 என 520 பேர் ஈரோடு வந்துள்ளனர். அவர்கள் நேற்றும், இன்றும் தொகுதிக்குட்பட்ட ராஜாஜிபுரம், அக்ரஹாரம், சம்பத் நகர், ஜி.எச். ரவுண்டானா, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com