சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியினரும் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். இவர்கள் தனியாக போட்டியிடுவதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, சுயேட்சை சின்னம்தான் ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து சென்னை எழும்பூரில் தனியார் விடுதியில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். 87 மாவட்ட செயலாளர்கள், 114 தலைசாமி கழக நிர்வாகிகள், 26 அமைப்பு செயலாளர்கள் ஆலோசனையில் பங்கேற்றனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவாகரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரண்டு பேரில் யார் பெரியவர்கள், யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அதனால், ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகவும் செல்வாக்கு உள்ள, அதேநேரம் பொதுமக்களின் ஆதரவு பெற்ற நபரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளார். இதுபற்றி இன்று மாலை நடைபெறும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படுகிறது. அதனால் இன்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.