ஒரு முஸ்லிம் தம்பதியினருக்கு 2005-ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். 2008-ல் இவர்களுக்கு விவாகரத்தானது.
2012-ல் அந்தப் பெண் இஸ்லாமிய பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் பிரிவு 3-ன் கீழ் பராமரிப்பு தொகைக்காக விண்ணப்பித்து இருக்கிறார்.
இந்தச் சட்டத்தின்படி, ஓர் இஸ்லாமிய பெண்ணின் திருமண பந்தம் முடிவுற்ற பின், மூன்று மாதங்களுக்குள் மெஹர் பெற உரிமை உண்டு. இது இத்தாத் காலம் (Iddat period) என்று அழைக்கப்படுகிறது.
2014-ல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அப்பெண்ணுக்கு மொத்த தொகையாக 4,32,000 ரூபாயை இரண்டு மாத கால இடைவெளிக்குள் வழங்க வேண்டும் என அந்நபருக்கு உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பெண்ணின் கணவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, பராமரிப்பு தொகை 9 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், ஆண்டுக்கு 8% வட்டி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அந்நபர் வழக்கு தொடர்ந்தார். அதேசமயம் அந்தக் கால இடைவெளியில் அப்பெண்ணிற்கு 1,50,000 ரூபாய் வழங்கி இருக்கிறார்.
2018-ல் அப்பெண் மறுமணம் செய்து கொண்டார். `அந்தப் பெண் மறுமணம் செய்து கொண்டதால் அவருக்கு பராமரிப்பு தொகை பெறத் தகுதி இல்லை’ என்பதைச் சுட்டிக்காட்டி அவர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.