இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்குப் பதிவு நிறைவடைந்து, வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.
தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகளிலும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.
வாக்குப்பதிவு நிலவரம்
மாலை நான்கு மணி நிலவரப்படி, களுத்துறையில் 75%, காலி பகுதியில் 74%, வவுனியாவில் 72%, மன்னாரில் 72%, பதுளையில் 73%, ஹம்பன்தோட்டாவில் 78%, கேகாலையில் 75%, அனுராதபுரத்தில் 75%, மட்டக்களப்பில் 69% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
அதேபோல, குருணாகல் பகுதியில் 75%, முல்லைத்தீவில் 68%, கண்டியில் 78%, அம்பாறையில் 70%, திரிகோணமலையில் 69%, மாத்தளையில் 74% வாக்குப் பதிவும் நடைபெற்றுள்ளது.
ஊரடங்கு அறிவிப்பு
இன்று (செப்டம்பர் 21) இரவு 10 மணி முதல் நாளை (செப்டம்பர் 22) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் நேரத்தில் வீட்டிலேயே நேரத்தைச் செலவிடுமாறு போலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை
வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குச்சீட்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் 1,703 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன.
தபால் வாக்குகளை எண்ணுவதற்கென 429 மையங்கள் உள்ளன, மற்ற மையங்களின் எண்ணிக்கை 1,274.
முதலில், தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் அரசு ஊழியர்கள் முன்னதாக தபால் வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியின் மேற்பார்வையில் நடைபெறும். வாக்குகள் எண்ணப்பட்டு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியின் கையொப்பத்துடன் தேர்தல் ஆணைக் குழுவுக்கு முடிவுகள் அனுப்பப்படும். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அதை ஊடகங்கள் வாயிலாக நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பார்.
இன்று இரவு சுமார் 9 மணிக்கு மேல் தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரம் தெரிய வரும் என்று, இலங்கையில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் கூறுகிறார்.
நாட்டில் அமைதியான சூழல் நிலவினால் நாளை (செப். 22) மதியத்திற்கு மேல் முழுமையான முடிவுகள் வெளிவரலாம் என்றும், பிரச்னை ஏதும் ஏற்பட்டால் இன்னும் தாமதமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தேர்தல் அலுவலகங்களில் போலீஸ் மற்றும் ராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி
இலங்கையின் அரசமைப்புச் சட்டம் பிரிவு 40-இன் படி, இடைக் காலத்தில் ஜனாதிபதியாக பதவியேற்பவர் அந்தப் பதவிக் காலம் முடியும் வரைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும்.
அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ரணிலின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செக, தமிழர்களின் பொது வேட்பாளர் என்ற பெயரில் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் நிற்கின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியான மைத்திரி பால சிறிசேன, அதற்கடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போதைய ஜனாதிபதியான ரணில் மீண்டும் களத்தில் இறங்கியிருப்பதன் மூலம் 2015க்கு பிறகு, மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தல் களத்தில் நிற்கிறார்.
தமிழர்களின் வாக்கு யாருக்கு?
இந்தத் தேர்தலில் பொருளாதார நெருக்கடியே மிக முக்கியமான பிரச்னையாக இருக்கக்கூடும். இலங்கையில் தற்போது பெட்ரோல் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிசை இல்லை என்றாலும் விலையேற்றம் மிகக் கடுமையாக இருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் இருந்து 2024-ஆம் ஆண்டிற்குள் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட காலத்தில் உயர்த்தப்பட்ட அதன் விலை தற்போது சற்று குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், பிற பொருட்களின் விலை அப்படியே நீடிக்கிறது.
சிறுபான்மையினரைப் பொருத்தவரை வேறு சில அம்சங்களும் அவர்களது வாக்குகளைத் தீர்மானிக்கலாம். குறிப்பாக, வடக்கில் வசிக்கும் தமிழர்களைப் பொருத்தவரை, போர் முடிந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ராணுவத்தாலும் தொல்பொருள் துறையாலும் காணிகள் அபகரிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். மலையக மக்கள் மத்தியில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
மிக நெருக்கடியான காலகட்டத்தில் ஜனாதிபதி பொறுப்பை ஏற்ற தன்னால் மட்டுமே, சர்வதேச நிதியத்தின் விதிமுறைகளின் கீழ் நாட்டை மீட்டெடுக்க முடியுமெனக் கூறி ஆதரவைத் திரட்டினார் தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க. சஜித் பிரேமதாஸவும் அனுர குமார திஸநாயக்கேவும் சில மாற்றங்களுடன் இதைச் செய்வோம் என்கிறார்கள்.
பாரம்பரிய கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை பலவீனமடைந்து காணப்படுகின்றன. ராஜபக்ஷக்களின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ களத்தில் இருந்தாலும் அக்கட்சியைச் சேர்ந்த பலர் ரணிலை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழர்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் செல்வாக்குள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு வேட்பாளரை ஆதரிப்பதாகச் சொன்னாலும் அதே கட்சியில் உள்ள சில தலைவர்கள், வேறு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பேசுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து இந்தத் தேர்தலை ஒரு சுவாரஸ்யமான, கவனிக்கத்தக்க தேர்தலாக்கியிருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு