சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் 7 தமிழக மீனவர்கள் 27ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விசைப்படகில் கடந்த 27ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 7 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, தமிழக மீனவர்களின் 98 மீன்பிடிப் படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாக்ஜலசந்தி பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும். எனவே, இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் போது, இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்திட, வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற எனது முந்தைய யோசனையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.