வெலிங்டன்: இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்று கோப்பையை கைப்பற்றியது.
வெலிங்டனில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 580 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேன் வில்லியம்சன் 215, ஹென்றி நிக்கோல்ஸ் 200 ரன்கள் விளாசினர். தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 66.5 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது.
416 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 43 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் 50, ஏஞ்சலோ மேத்யூஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 142 ஓவர்களில் 358 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
குசால் மெண்டிஸ் 50, ஏஞ்சலோ மேத்யூஸ் 2, தினேஷ் சந்திமால் 62, தனஞ்ஜெயா டி சில்வா 98, நிஷான் மதுஷ்கா 39, கசன் ரஜிதா 20, பிரபாத் ஜெயசூர்யா 2, லகிரு குமரா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் டிம் சவுதி, பிளேர் டிக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மைக்கேல் பிரேஸ்வெல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. ஆட்ட நாயகனாக ஹென்றி நிக்கோல்ஸும், தொடர் நாயகனான கேன் வில்லியம்சனும் தேர்வானார்கள்.