இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் நியூஸிலாந்து அணி | New Zealand struggling to avoid innings defeat versus sri lanka in second Test

Share

காலே: இலங்கைக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க நியூஸிலாந்து அணி போராடி வருகிறது.

நியூஸிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 26-ம் தேதி தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தினேஷ் சண்டிமால் 116 ரன்கள் எடுத்தார். கமிந்து மெண்டிஸ் 182, குசால் மெண்டில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று 3-ம் நாள் ஆட்டத்தை கேன் வில்லியம்ஸன் 6 ரன்களுடனும், அஜாஸ் பட்டேல் ரன் எடுக்காமலும் தொடங்கினர். ஆனால், பிரபாத் ஜெயசூர்யா, நிஷான் பெய்ரிஸ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் நியூஸிலாந்து அணி 39.5 ஓவர்களில் 88 ரன்களுக்கு சுருண்டது.

கேன் வில்லியம்ஸன் 7, அஜாஸ் பட்டேல் 8, ரச்சின் ரவீந்திரா 10, டேரில் மிட்செல் 13, டாம் பிளண்டெல் 1, கிளென் பிலிப்ஸ் 0, சான்ட்னர் 29, சவுத்தி 2 ரன்கள் எடுத்தனர். பிரபாத் ஜெயசூர்யா 6 விக்கெட்களையும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்களையும், அசிதா பெர்னாண்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 514 ரன்கள் குறைவாக எடுத்த நியூஸிலாந்து அணி ஃபாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸை தொடர்ந்தது. 2-வது இன்னிங்ஸிலும் அந்த அணி சரிவைக் கண்டது. டாம் லேதம் 0, டேரில் மிட்செல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தாலும் டேவன் கான்வே 61, கேன் வில்லியம்ஸன் 47, ரச்சின் ரவீந்திரா 12 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர்.

3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் டாம் பிளண்டெல் 47, கிளென் பிலிப்ஸ் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க நியூஸிலாந்து இன்னும் 315 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

இலங்கை தரப்பில் நிஷான் பெய்ரிஸ் 3, பிரபாத் ஜெயசூர்யா, தனஞ்செய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com