இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ‘புல்லட்’ சின்னம் கேட்கும் எடப்பாடி அணி: தேர்தல் களத்தில் பரபரப்பு

Share

சென்னை: இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்பில்லாததால் ‘புல்லட்’ சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் முறையிட எடப்பாடி அணியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவின் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தனித்தனியாக போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால், ஓபிஎஸ், இபிஎஸ் என இருவருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகி விட்டதாகவே கூறப்படுகிறது. காரணம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையே தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எடப்பாடி அணியினர் நிராகரித்து விட்டார்கள். அதிமுக பொதுக்குழு கூடி ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கு பதில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறி வருகின்றனர். அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம், அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து செயல்பட்டால்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இல்லையென்றால் இருவரும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகிறார்கள்.ஏற்கனவே ஜெயலலிதா ‘சேவல்’ சின்னத்தில் போட்டியிட்டதால் எடப்பாடி அணியினர் சேவல் சின்னத்தை பெற முயற்சி செய்தனர். ஆனால், பறவைகளை சுயேட்சை சின்னமாக ஒதுக்குவதை தேர்தல் ஆணையம் தற்போது நிறுத்தி விட்டது. அதனால் சேவல் சின்னம் எடப்பாடி அணிக்கு கிடைக்காது. இதையடுத்து தற்போது, எடப்பாடி அணியினர் ‘புல்லட்’ சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தேர்தல் ஆணையத்தை அணுக ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இதுகுறித்துதான் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் புல்லட் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதால் வரும் இடைத்தேர்தலில் எடப்பாடி அணி சார்பில் நிற்கும் வேட்பாளர் புல்லட் சின்னம் கேட்டு மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. அதே நேரம் எடப்பாடி அணியினர் கேட்கும் புல்லட் சின்னம் கிடைக்குமா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com