அதையடுத்து, மருத்துவமனைக்குச் செல்லாமலே பெண் ஒருவருக்கு பாரம்பர்ய முறையில் குழந்தை பிறந்ததை அறிந்த அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தம்பதியின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். தம்பதியின் வீட்டுக்குச் சென்றபோது, தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும், மருத்துவமனைக்கு அனுப்பத் தயாராக இல்லை எனவும் நெப்போலியன் கூறியிருக்கிறார். மீண்டும் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் மருத்துவர்கள், சுகாதாரத்துறைப் பணியாளர்கள், ராசிபுரம் தாசில்தார், வெண்ணந்தூர் போலீஸார் உள்ளிட்டோர் நெப்போலியன், பிரியா தம்பதியின் வீட்டுக்குச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு வலியுறுத்தியிருக்கின்றனர்.
கூடவே, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தையும் அழைத்து வந்திருக்கின்றனர். ஆனால் பிரியா, `மருத்துவமனைக்கு வரமுடியாது’ என்று உறுதியாக மறுத்திருக்கிறார். அதோடு, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
‘மருத்துவமனைக்கு அனுப்ப முடியாது’ எனக் கூறியதால் சிறிது நேரம் பரபரப்பான சுழல் காணப்பட்டது. இந்த நிலையில், நேற்றும் தம்பதியின் வீட்டுக்குச் சென்ற மருத்துவக் குழுவினர், பிரியாவை குழந்தையுடன் மருத்துவமனைக்கு அழைத்திருக்கின்றனர். ஆனால், பிரியா செல்ல மறுத்துவிட்டார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தம்பதி, “சுகாதாரத்துறைப் பணியாளர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு தொந்தரவு செய்து வருகின்றனர். எங்களுக்கு அங்கு செல்ல விருப்பமில்லை” என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், இந்த விவகாரத்தை மேலதிகாரிகளுக்கு வருவாய்த்துறையினரும், மருத்துவத்துறையினரும் கொண்டுசென்றிருக்கின்றனர்.